அனுமதி பெறாவிட்டால் சிலந்தி ஆற்றில் தடுப்பணை பணியை நிறுத்த வேண்டும்: கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கேரள அரசு உரிய அனுமதி பெற்றுள்ளதா? இல்லாவிட்டால், கட்டுமானப் பணியை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் அருகே உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசுமேற்கொண்டிருப்பதாக தகவல்வெளியானது. இதன் காரணமாக,திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கரில் விவசாயபாசனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், தடுப்பணை கட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினர்.

இதையடுத்து, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தின் உரிமையை சட்டரீதியாக மட்டுமல்லாமல் அனைத்து விதத்திலும் நிலைநாட்டுவோம்’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் அமர்வு, சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்காக எடுத்து நேற்று விசாரித்தனர்.

தீர்ப்பாயம் கேள்வி: அப்போது, சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய வன விலங்குகள் வாரியத்திடம் கேரள அரசு உரிய அனுமதிபெற்றுள்ளதா? என கேள்வி எழுப்பினர். உரிய அனுமதி பெறப்படாவிட்டால் தடுப்பணை கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், தடுப்பணை கட்டுவதால் தமிழகத்துக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை வரும் 24-ம்தேதிக்கு தள்ளிவைத்தது. அன்றைய தினம், கேரள அரசும், தமிழகஅரசும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளன.

இதற்கிடையே, சிலந்தி ஆற்றில்தடுப்பணை கட்டப்படும் முயற்சிகுறித்து அமராவதி ஆற்றுப்படுகைபகுதியை சேர்ந்த பொதுமக்கள்,விவசாயிகள் கூறியதாவது:

கேரளாவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் குடிநீர் தயாரிப்பு ஆலைக்காக இந்த அணை கட்டப்படுவதாக கூறப்படுகிறது.இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், அமராவதி அணைக்கு வரும்நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து, ஆற்றுப்படுகை முழுவதும் பாலைவனமாகும் சூழல் உருவாகும்.

தமிழக அரசுக்கு தெரியாமல் கேரள அரசு அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு இல்லை. எனவே,பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வசதியையும், பல லட்சம் மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்துவரும் அமராவதி அணையின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் கேரள அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த விவகாரத்தை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பது அவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE