பிரியங்கா காந்தி மகள் மீது அவதூறு: காங்., புகாரின் பேரில் இமாச்சலில் வழக்கு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா வத்ராவின் மகள் மீது ட்விட்டரில் பொய் தகவல்கள் பரப்பியதாக வழக்கு பதிவாகி உள்ளது. இமாச்சல பிரதேசக் காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகார் செய்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

மக்களவை தேர்தல் நடைபெறும் சூழலில் தங்களுக்குள் கடுமையான விமர்சனங்களை அரசியல்வாதிகள் முன் வைத்துக் கொள்கின்றனர். இதில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ரா மகள் மீது பொய்யானத் தகவல்கள் பரவி உள்ளன.

இது தொடர்பாக ஒரு ட்விட்டர் பதிவில், பிரியங்காவின் மகளான மிரய்யா வத்ராவுக்கு ரூ.3,000 கோடி சொத்து உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இப்பதிவை இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அனுப் வர்மா என்பவர் தனக்கானக் கணக்கில் பதிவு செய்துள்ளார்.

இதன் மீது இமாச்சல பிரதேசத்தின் சோட்டா சிம்லாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் பிரமுகரான பிரமோத் குப்தா என்பவர் தம் பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். கடந்த மே 10 இந்த புகார் சோட்டா சிம்லா காவல் நிலையத்தில் பதிவாகி உள்ளது.

தனது புகாரில் பிரமோத் குப்தா குறிப்பிடுகையில், “தேர்தல் சமயத்தில் காங்கிரஸுக்கு களங்கம் ஏற்படுத்த இந்த பதிவு வெளியாகி உள்ளது. நம் கட்சியின் தலைவர் பிரியங்கா வத்ரா மிகவும் முக்கியமானவர் என்பதால் அவரது மகள் பற்றி இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் இடம்பெற்ற பொய்யானத் தகவல்களால் பொது மக்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர். காங்கிரஸ் மீதானக் காழ்ப்புணர்ச்சியில் இதனை பதிவு செய்த அனுப் வர்மா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட போலீஸார் புகாரில் உண்மை இருப்பதாக வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஐபிசி 153, 469, 500, மற்றும் 505 பிரிவுகளின் கீழ் இவ்வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE