இணையவழி மோசடி: 18 லட்சம் சிம் கார்டுகள் விரைவில் முடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தொலைத்தொடர்பு துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இணையவழி குற்றம் (சைபர் கிரைம்), நிதி மோசடி உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மொபைல் இணைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பல்வேறு சட்ட அமலாக்க முகமைகளால் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில், ஆயிரக்கணக்கான சிம் கார்டுகளை ஒரே ஒரு மொபைல் போனில் பயன்படுத்தி மோசடிகள் நடைபெறுவது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, 28,220 மொபைல் இணைப்பை துண்டிக்கவும், அந்த சாதனங்களுடன் தொடர்புடைய 20 லட்சத்துக்கும் அதிகமான இணைப்புகளை மீண்டும் சரிபார்க்கவும் தொலைத் தொடர்புநிறுவனங்களுக்கு மே 9-ம் தேதி அறிவுறுத்தப்பட்டது. பொதுவாக இதுபோன்ற சோதனைகளில் 10 சதவீத இணைப்புகள் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றன. எஞ்சியுள்ள இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 15 நாட்களுக்குள் மறுசரிபார்ப்பை முடித்தவுடன் சிம் கார்டுகளின் சேவையை முடக்கும் நடவடிக்கைகள் தொடங்கும்.

அந்த வகையில், 18 லட்சம் சிம் கார்டுகள் விரைவில் முடக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE