“பணம் பறிக்க பயன்படும் சிபிஐ, அமலாக்கத் துறையை இழுத்து மூட வேண்டும்” - அகிலேஷ்

By செய்திப்பிரிவு

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நீங்கள் நிதி மோசடி செய்திருந்தால் அதை விசாரிக்க வருமான வரித் துறை உள்ளது. அப்புறம் ஏன் உங்களுக்கு சிபிஐ தேவை? மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை செயல்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாஜகவின் அரசியல் எதிரிகளை பழிவாங்க மட்டுமே சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. கட்சிகளை உடைக்க அவை உதவுகின்றன. சிபிஐ சோதனைகளை தவறாக பயன்படுத்துவதன் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் செயலில் பாஜக ஈடுபடுகிறது.

தேர்தல் பத்திரம் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை திரட்டியதன் மூலம் பாஜகவின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்தது. பணமதிப்பு நீக்கத்தின்போது என்ன தவறு நடந்தது என்பதை ஏன் இந்த அமைப்புகள் விசாரிக்கவில்லை. அப்போதுதான் பலர் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றினார்கள்.

இதுபோன்றவற்றை பார்க்கும்போது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இனி தேவையில்லை என்றே தோன்றுகிறது. அவற்றை இழுத்து மூடிவிடலாம். இண்டியா கூட்டணிக்கு இதை நான் ஒரு முன்மொழிவாகவே வைக்கிறேன். இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.

உத்தர பிரதேசத்தில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. நான்குகட்ட வாக்குப்பதிவு ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், ஐந்தாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஆறு மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் முறையே மே 25, ஜூன் 1-ல் நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE