காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பாஜக பிரமுகர் உயிரிழப்பு: சர்வதேச அமைப்பின் விசாரணைக்கு பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்று முன்தினம் நிகழ்ந்த 2 தீவிரவாத தாக்குதல்களில் பாஜக தலைவர் ஒருவர்உயிரிழந்தார். இரண்டு சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர்.

அனந்த்நாக், யன்னாரில் உள்ள திறந்தவெளி சுற்றுலா முகாம் பகுதியில் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. துப்பாக்கி துண்டுகள் தாக்கியதில் இரண்டு சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த தம்பதியினர் ஆவர்.

முதல் சம்பவம் நடைபெற்று அரை மணி நேரம் கழித்து இரவு 10.30 மணியளவில் ஷோபியானில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதில் அய்ஜாஸ் அகமது சேக் கொல்லப்பட்டார். பாஜகவுடன் தொடர்புடைய இவர் முன்னாள் கிராமத் தலைவர் ஆவார்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.

இந்தத் தீவிரவாத தாக்குதல்களுக்கு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “தீவிரவாதம் இன்னும் இங்கு இருக்கிறது. அவர் (அய்ஜாஸ் அகமது) எந்தக் கட்சியை சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை. அவர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டாரா அல்லது இங்குள்ள மக்களால் கொல்லப்பட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். யார் மீதும் பழி சுமத்துவதற்கு முன்பாக விசாரணை வேகமாக நடத்தப்பட வேண்டும். சுற்றுலாவாசிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மிகவும் துயரமனது. இதனால், நமது சுற்றுலா துறையும் பாதிக்கப்படும். தீவிரவாதத்தை நாம் முற்றிலும் ஒழிக்க வேண்டும். இந்த நிகழ்வுதொடர்பாக சர்வதேச விசாரணை அமைப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தியும் இந்தத் தாக்குதலை கண்டித்து பதிவிட்டுள்ளார்.

இன்று காஷ்மீரில் 5-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.இந்தச் சூழலில், இரண்டு தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE