பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினருடன் கேஜ்ரிவால் பேரணி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஆம் ஆத்மி கட்சியினருடன் முதல்வர் கேஜ்ரிவால் பேரணியாக சென்றார். ஆம் ஆத்மியை அழிக்க ‘ஆபரேஷன் துடைப்பம்' என்ற சதி திட்டத்தை பாஜக தொடங்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

‘‘ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை மே 19-ம் தேதி மதியம் முற்றுகையிடுவோம். அப்போது எங்களை கைது செய்யுங்கள்’’ என்று டெல்லிமுதல்வர் கேஜ்ரிவால் சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், அந்த கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், தொண்டர்கள் நேற்று காலை குவிந்தனர். அப்போது, கேஜ்ரிவால் பேசியதாவது:

எதிர்காலத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய போட்டியாக ஆம் ஆத்மி உருவெடுக்கும் என்பதை அந்த கட்சி உணர்ந்துள்ளது. அதன்காரணமாக இப்போதே ஆம் ஆத்மியை முழுமையாக அழிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அதற்காக 'ஆபரேஷன் துடைப்பம்' என்ற சதி திட்டத்தை பாஜக தொடங்கியுள்ளது.

மக்களவை தேர்தல் முடிந்த பிறகு, ஆம் ஆத்மியின் வங்கி கணக்குகள் முடக்கப்படும். பிறகு, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல், டெல்லி பின்தங்கிய நிலையில் இருந்தது. ஆம் ஆத்மி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டது. ஏழைகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த மக்கள் நல திட்டங்களை தடுக்கவே ஆம் ஆத்மி தலைவர்களை அடுத்தடுத்து கைது செய்கின்றனர்.

மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக பொய் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். ஆனால் இதுவரை ஒருபைசாகூட பறிமுதல் செய்யவில்லை.

என்னை காலிஸ்தான் தீவிரவாதி என்று பிரதமர் குற்றம்சாட்டுகிறார். அடுத்த10 நாட்களுக்கு மேலும் பல்வேறுபொய்கள், அபத்தமான குற்றச்சாட்டுகளை அவர் சுமத்துவார்.

சிறையில் 50 நாட்கள் இருந்தேன். அப்போது பகவத் கீதையை 2 முறையும், ராமாயணத்தை ஒருமுறையும் படித்தேன். கடவுளின் கருணையால் ஜாமீனில் வந்துள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து, கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி தலைவர்கள், தொண்டர்கள் பாஜக தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர். பாஜக அலுவலகத்துக்கு 800 மீட்டர் முன்பாக அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, அனைவரும் சாலையில் அமர்ந்து பாஜக மற்றும்பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்டனர். அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். கேஜ்ரிவால் உட்பட யாரும் கைது செய்யப்படவில்லை. பாஜக அலுவலக பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது.

பாஜக குற்றச்சாட்டு: டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறும்போது, ‘‘ஊழல் குற்றச்சாட்டு காரணமாக நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதில் பாஜகவுக்கு எந்த தொடர்பும் கிடையாது. ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் கேஜ்ரிவால் மவுனத்தை கலைக்க வேண்டும்’’ என்றார்.

டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மிமூத்த தலைவருமான ஆதிஷி கூறியபோது, ‘‘ஸ்வாதி மீது ஊழல் தடுப்புபிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்த சூழலில் பாஜகவின் கைப்பாவையாக ஸ்வாதி மாலிவால் செயல்படுகிறார்’’ என்று குற்றம்சாட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE