குடியுரிமை சான்றிதழ் வழங்கியது பாஜக நடத்திய நாடகம்: மம்தா பானர்ஜி விமர்சனம்

By செய்திப்பிரிவு

குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதன் அடிப்படையில் 300 பேருக்கு அண்மையில் இந்தியக் குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தின் ஜார்கிராமில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: குடியுரிமை சான்றிதழ் 300 பேருக்கு வழங்கியதை மக்கள் உண்மை என நினைக்கலாம். ஆனால் இது தேர்தலுக்கான அரசியல். பிரதமரையோ அல்லது அவரது உத்தரவாதங்களையோ நீங்கள் நம்ப வேண்டாம். பிரதமர் மோடி திங்கட்கிழமை ஜார்கிராம் வருகிறார். அவர் சிஏஏ குறித்து பொய் கூறலாம். அதை நீங்கள் நம்ப வேண்டாம். சந்தேஷ்காலி போன்று பாஜக நடத்திய ஒரு நாடகம் தான் அது.

சிஏஏ-வுக்கு முறையிடும் போதெல்லாம் நீங்கள் ஒரு வெளிநாட்டவர் என்று குறிக்கப்படுவீர்கள். உங்கள் குழந்தைகள் அமெரிக்கா போன்ற வெளி நாடு செல்லும் போது 5 முதல் 10 ஆண்டுகள் தங்கினால் கிரீன் கார்டு தருவார்கள். அதுபோன்றது தான் இந்த சிஏஏ சான்றிதழ். கிரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்காவில் வசிக்கலாம். வேலை பார்க்கலாம். வாக்களிக்கும் உரிமை உட்பட குடிமக்களுக்கான முழு உரிமைகள் கிடைக்காது.

ஆதிவாசிகள், குத்மிஸ் சமூகத்தினர் இடையே சண்டையை தூண்டிவிட பாஜக முயற்சிக்கிறது. என்ஆர்சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) மூலம் ஆதிவாசிகள், குத்மிஸ் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை பாஜக விரட்ட விரும்பலாம், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் அவர்களிடையே மோதலை ஏற்படுத்தலாம். ஆனால் நான் எனது இறுதி மூச்சு உள்ளவரை அவர்களை பாதுகாப்பேன். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE