ரேபரேலி தொகுதி உடனான தனது பால்ய கால நினைவுகளை பகிர்ந்த ராகுல்!

By செய்திப்பிரிவு

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, அத்தொகுதியுடனான தன் பால்யகால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

“ரேபரேலி நாங்கள் சிறு வயதில் சில காலம் வாழ்ந்த ஊர். சமீபத்தில் அங்கு சென்றிருந்த போது நானும் சகோதரி பிரியங்காவும் நாங்கள் பால்ய காலத்தில் செலவிட்ட தெருக்களில் நடந்து சென்றோம். மிகவும் இனிமையான நினைவுகள் அவை. என் பாட்டியின் ஞானம், என் அப்பாவுக்கு பிடித்தமான ஜிலேபி, பிரியங்கா செய்யும் கேக்குகள்... எல்லாம் எதோ நேற்று நடந்துபோல் இருக்கின்றன.

எங்கள் சிறு வயது முதல் அரசியலுடன் ஆழமான உறவைக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரு போதும் அரசியல் எங்கள் உறவில் குறுக்கிட்டதில்லை” என்று எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

நேற்று முன்தினம் ராகுல் காந்தி,அவரது தாய் சோனியா காந்தி,சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் ரேபரேலியில் பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “இந்தியாவின் வளர்ச்சியில் ரேபரேலிக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தியாவுக்கு வழிகாட்டும் தொகுதி அது. உத்தர பிரதேசத்தின் அரசியல் மற்றும் கருத்தியல் மையமாக ரேபரேலி உள்ளது. தற்போதைய சூழலில் ரேபரேலி முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டியது அவசியம்” என்றார்.

சோனியா காந்தி பேசுகையில், “என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் என்னை உங்கள் சொந்தமாக நடத்தியது போல், ராகுலையும் உங்கள் சொந்தமாக நடத்த வேண்டும். ராகுல் உங்களை ஏமாற்ற மாட்டார்” என்றார். நாளை ரேபரேலியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE