“பிரிவினையை தூண்டுகிறார் மோடி” - கார்கே குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் சரத் பவார், உத்தவ் தாக்கரே, கார்கே உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் தலைவர்கள், நிருபர்களுக்கு நேற்று கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது கார்கே கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசுகிறார். காங்கிரஸ், சமாஜ் வாதி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள் என்று அபாண்டமாக குற்றம்சாட்டு கிறார். நாங்கள் இதுவரை புல்டோசர்களை பயன்படுத்தியது கிடையாது.

பிரதமர் மோடியின் கருத்துகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால், அரசமைப்பு சாசனத்தின் அடிப்படையில் செயல்படுவோம்.

மகாராஷ்டிராவில் துரோகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டு போலி அணிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. மத்தியிலும் மகாராஷ்டிராவிலும் ஆளும் பாஜகஅரசுகள் சர்வாதிகார போக்குடன் செயல்படுகின்றன.

தற்போதைய மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவின் 48 தொகுதிகளில் 46-ல் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். டெல்லி உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். பஞ்சாபில் மட்டும் எதிரெதிர் அணியில் போட்டியிடு கிறோம். இது ஜனநாயக ரீதியிலான போட்டி. நாங்கள் சர்வாதிகாரத்தில் ஈடுபடவில்லை.

பாஜகவை தோற்கடிக்க அனைத்து வகையிலும் வியூகம் வகுத்து செயல்படுவோம். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இண்டியா கூட்டணியில் நீடிக்கிறார். கூட்டணி குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி முடிவு எடுக்க முடியாது. காங்கிரஸ் தலைமையே முடிவு எடுக்கும். தலைமையின் முடிவுக்கு கட்டுப்படாதவர்கள் வெளியேற்றப்படுவார்கள். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE