“நானும் ராகுலும் போட்டியிட்டால் அது பாஜகவுக்கு சாதகமாக அமையும்” - பிரியங்கா காந்தி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி. இந்த தேர்தலில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சிக்காக தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் அது குறித்து அவர் விளக்கம் தந்துள்ளார்.

“ரேபரேலி தொகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நான் பரப்புரை மேற்கொண்டு வருகிறேன். எங்கள் குடும்பத்துக்கு ரேபரேலியுடன் இணக்கமான உறவு உண்டு. அதனால் இங்கு நாங்கள் வர வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பார்கள். அவர்களுடன் கலந்து பேச வேண்டும் என்றும் விரும்புவார்கள். இங்கு நடைபெறும் தேர்தலில் எங்களால் ரிமோட் கன்ட்ரோல் வைத்து கொண்டுள்ளது போல வெல்ல முடியாது.

நாங்கள் இருவரும் தேர்தலில் போட்டியிட்டால் தொகுதியில் இருக்க வேண்டிய சூழல் வரும். அதனால் நாடு முழுவதும் பரப்புரை மேற்கொள்ள ஒருவர் வேண்டும் என முடிவு செய்தோம். அதேநேரத்தில் நாங்கள் இருவரும் போட்டியிடுவது பாஜகவுக்கு சாதகமாக அமையும்.

நான் ஒருபோதும் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ நினைத்ததில்லை. கட்சிக்காக பணியாற்றி வருகிறேன். நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்பினால் நிச்சயம் போட்டியிடுவேன்.

அமேதி, ரேபரேலியில் காங்கிரஸ் கட்சியின் பந்தம் வலுவானது. அதனால் இந்த தொகுதிகளை கைவிடவே மாட்டோம். வதோதராவில் பிரதமர் மோடி ஏன் 2014-க்கு பிறகு போட்டியிடவில்லை. அவருக்கு அச்சமா? குஜராத் மாநிலத்தை விட்டு ஏன் வந்தார்?” என பிரியங்கா காந்தி கேட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE