ஆந்திராவில் தேர்தல் முடிவுக்கு பிறகும் வன்முறைக்கு வாய்ப்பு: பாதுகாப்புக்கு 25 கம்பெனி வீரர்களை நிறுத்த தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவு

By என்.மகேஷ்குமார்


அமராவதி: ஆந்திராவில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் வன்முறைக்கு வாய்ப்பிருப்பதால் 25 கம்பெனி துணை ராணுவப் படையை அம்மாநிலத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் மத்திய உள்துறைக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நாளிலும் அதன் பிறகு 2 நாட்களும் அங்கு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

பலநாடு, நரசராவ் பேட்டை, தாடி பத்ரி, சந்திரகிரி, விசாகப்பட்டினம் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது
தாக்குல் நடத்தப்பட்டது. சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. பலர் காயம் அடைந்தனர். வன்முறையை அதிகாரிகள் கட்டுப்படுத்த தவறிவிட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம், மாநில தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி ஆகியோருக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதினார். துணை ராணுவப் படை மூலம் வன்முறையை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் ஜவஹர் ரெட்டி, டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா ஆகியோருக்கு தலைமை தேர்தல் ஆணையர் சம்மன் அனுப்பினார். வன்முறை கட்டுப்படுத்த தவறியது தொடர்பாக டெல்லிக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதன்பேரில் ஜவஹர் ரெட்டி, ஹரீஷ்குமார் குப்தா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் தங்களின் அறிக்கையை சமர்பித்தனர். சட்டம் ஒழுங்கை காப்பாற்றத் தவறியதாக 3 எஸ்.பி.க்கள், ஒரு மாவட்ட ஆட்சியர் உள்பட 12 அதிகாரிகள் மீதும் இருவரும் தங்கள் அறிக்கையை தனித்தனியே சமர்பித்தனர்.

இதையடுத்து தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில், பல்நாடு மாவட்ட ஆட்சியர் எல்.சிவசங்கர், திருப்பதி எஸ்.பி. கிருஷ்ணகாந்த் பட்டேல் ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல்நாடு எஸ்.பி. பிந்துமாதவ், அனந்தபூர் எஸ்.பி. அமீத் பார்டர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் 12 போலீஸ் அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேற்கண்ட 16 பேர் மீதும் துறை ரீதியிலான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தி 60 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை சஸ்பெண்ட் மற்றும் இடமாற்ற உத்தரவில் மாற்றம் செய்யக் கூடாது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திராவில் ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் வன்முறைச் சம்பவங்களுக்கு வாய்ப்புள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளதால் அம்மாநிலத்தில் 25 கம்பெனி துணை ராணுவப் படையை நிறுத்தி வைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE