கடந்த 2019 முதல் இதுவரை 400 சொத்துகளை முடக்கிய என்ஐஏ

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2009-ம் ஆண்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, தேசிய அளவிலான தீவிரவாத வழக்குகளை விசாரித்து வருகிறது. குறிப்பாக தீவிரவாத அமைப்புகள், தீவிரவாதிகளின் சொத்துகளை முடக்கி வருகிறது. இதன்படி கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை 400-க்கும் மேற்பட்ட சொத்துகளை என்ஐஏ முடக்கி உள்ளது.

இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது: என்ஐஏ அமைப்பின் ராஞ்சி பிரிவு, பிஹார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த மாவோயிஸ்ட் அமைப்புகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த பிரிவு சார்பில் அதிகபட்சமாக 208 சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. இதற்குஅடுத்தபடியாக ஜம்மு பிரிவு சார்பில் 99 சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சண்டிகர் பிரிவு 33, கொச்சி பிரிவு 27 சொத்துகளை முடக்கி உள்ளன. இதில் பெரும்பாலானவை, தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவை ஆகும்.

டெல்லி என்ஐஏ பிரிவு சார்பில் 22, மும்பை பிரிவு சார்பில் 5, ஹைதராபாத் பிரிவு சார்பில் 4, சென்னை பிரிவு சார்பில் 3 சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE