காங்கிரஸ், சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்து விடுவார்கள்: பிரதமர் மோடி விமர்சனம்

By செய்திப்பிரிவு

பாராபங்கி: ‘‘காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள்’’ என்று உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டு நலனுக்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. மறுபக்கம், நாட்டில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த இண்டியா கூட்டணி முயற்சிக்கிறது.

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள். புல்டோசரை கொண்டு எங்கு இடிக்க வேண்டும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியினர் பாடம் கற்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

இந்நிலையில், இந்தி தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்ற பிரதமர் மோடியிடம், ‘‘நீங்கள் ஏன் செய்தியாளர் சந்திப்பை நடத்துவதே இல்லை? தேர்தல் ஆணையத்தின் தற்போதைய செயல்பாடு எப்படி உள்ளது?’’ என்பதுஉட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளித்து பிரதமர் மோடி கூறியதாவது:

ஊடகங்கள் பெரும்பாலும் ஏதாவதுஒரு அரசியல் கட்சி ஆதரவு நிறுவனமாகவே உள்ளன. செய்தியாளர்கள் தங்கள் சொந்த கருத்துகள், கொள்கைகளை முன்னிறுத்துகின்றனர். இதுபற்றி மக்களும் நன்கு அறிந்துள்ளனர். முன்பெல்லாம் ஊடகங்கள் அடையாளம் தெரியாதவையாக இருந்தன. ஊடகத்தில் யார் எழுதுகிறார், அவர்களது கொள்கை என்ன? என்பதை பற்றியெல்லாம் முன்பு யாரும் கவலைப்பட்டது இல்லை. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. அதனால்தான் மக்கள் மன்றமான நாடாளுமன்றத்தில் மட்டும் பதில் அளிக்கிறேன்.

அரசியலில் தற்போது புதிய கலாச்சாரம் உருவெடுத்துள்ளது. அவர்களுக்கு செயல்பாடு பற்றி கவலை இல்லை. ஊடகத்தை சமாளிப்பதில்தான் கவனம் செலுத்துகின்றன. அந்த நடைமுறையை பின்பற்றுவதில் எனக்குநம்பிக்கை இல்லை. கடினமாக உழைக்கவேண்டும். அதன் பலன் ஏழைகளை சென்றடைய வேண்டும் என்பதில் மட்டுமே என் கவனம் உள்ளது. டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் அரசுநிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். சிறியமாவட்டத்தில், சிறிய திட்டம் தொடங்கப்பட்டாலும் அதில் பங்கேற்கிறேன். இதன்மூலம் புதிய செயல் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளேன். இதைஅங்கீகரிக்க வேண்டுமா, வேண்டாமாஎன ஊடகங்கள் முடிவு செய்யட்டும்.

ஒரு ஆணையரின் தலைமையில் மட்டுமே தேர்தல் ஆணையம் 56 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் தேர்தல் ஆணையர்கள் அவர்களின் ஓய்வுக்கு பிறகு மாநில ஆளுநர்கள் ஆனார்கள், எம்.பி.க்கள் ஆனார்கள். டி.என். சேஷன் போன்றவர்கள் தேர்தலில்அத்வானியை எதிர்த்து போட்டியிட்டனர். எம்.எஸ்.கில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். இப்போதுதான், தேர்தல் ஆணையம் முழு சுதந்திரத்துடன் செயல்படுகிறது.

‘பாஜக 400 தொகுதிகளுக்கு மேல்வெற்றி பெற்றால், அரசியல் சாசனத்தைமாற்றும்’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அரசியல் சாசனத்தில் முதலில் கைவைத்தவர் பண்டிட் நேருதான். அவர் கொண்டுவந்த திருத்தங்களால் பேச்சுரிமை கட்டுப்படுத்தப்பட்டது. இது ஜனநாயகத்துக்கும், அரசியல்சாசனத்துக்கும் எதிரானது. அதன்பிறகு நேருவின் மகள் இந்திரா காந்தி, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசரநிலைபிரகடனம் செய்தார். ஷா பானு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஊடகங்களுக்கு ராஜீவ் காந்தி கட்டுப்பாடு விதித்தார். மத்திய அமைச்சரவையின் முடிவை ராகுல் காந்தி கிழித்து எறிந்தார். ஒரே குடும்பத்தினர் அரசியல்சாசனத்தை பல முறை அவமதித்துள்ளனர். இவ்வாறு பிரதமர் கூறினார்.

‘மெட்ரோ ரயில் திட்டம் எப்படி முன்னேறும்?’

புதுடெல்லி: எல் அண்ட் டி தலைவர் சங்கர் ராமன் சமீபத்தில் அளித்த நேர்காணலில், ‘‘தெலங்கானா அரசு இலவச பேருந்து பயண திட்டத்தை அறிவித்துள்ளது. அதனால் மெட்ரோ ரயிலில் கூட்டம் இல்லை. எனவே, ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை விற்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்’’ என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘‘ஒரு நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருகிறீர்கள். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, அதே நகரில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என வாக்குறுதி அளிக்கிறீர்கள். இதன் காரணமாக, மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை பாதியாக குறையும். இப்படி இருந்தால் மெட்ரோ ரயில் திட்டம் எப்படி முன்னேறும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மாநில அரசுகள் பல இலவச திட்டங்களை அறிவித்து கடும் நிதி நெருக்கடியில் சிக்குகின்றன’’ என்றார்.

‘தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்’

புதுடெல்லி: தொலைக்காட்சி நேர்காணலில் பிரதமர் கூறியதாவது: ஒருசில தொழிலதிபர்களுக்கு மட்டும் எனது அரசு உதவுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டுகிறார். நாட்டின் வளத்தை உருவாக்குபவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது சமஅளவில் நான் அக்கறை செலுத்துகிறேன். என்னை பொருத்தவரை நாட்டின் வளர்ச்சிக்கு முதலீட்டாளர்களின் பணம், நிர்வாகத்தினரின் புத்திசாலித்தனம், உழைப்பாளர்களின் வியர்வை ஆகிய அனைத்தும் முக்கியம். நாட்டில் வளத்தை உருவாக்குபவர்களுக்கு துணைநிற்கிறேன்.

அவர்கள் யாருக்காவது நான் முறைகேடாக உதவியிருந்தால் என்னை தூக்கிலிடுங்கள். தண்டனையை ஏற்க தயார். நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேரு அரசைக்கூட டாடா - பிர்லா அரசு என்றுதான் குற்றம்சாட்டினர். அதே குற்றச்சாட்டை நானும் ஏற்க வேண்டும் என சோனியா காந்தி குடும்பம் விரும்புகிறது.

சுதந்திர தின நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்கள் பட்டியலில் விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்களை நான் சேர்க்கிறேன். சாதனை படைத்தவர்களை மதிக்காவிட்டால், விஞ்ஞானிகள், முனைவர்கள் எப்படி கிடைப்பார்கள். அனைத்து துறைகளிலும் சாதனையாளர்கள் மதிக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE