தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்: காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரை

By இரா.வினோத்


பெங்களூரு: காவிரியில் தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

காவிரி ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால்ராய், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகளும், வானிலை ஆய்வு மைய நிபுணர்களும் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். கூட்டத்தின் தொடக்கத்தில் 4 மாநிலங்களில் காவிரி பாசனப் பகுதிகளில் அமைந்துள்ள அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பதிவான மழையின் அளவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

நிலுவையில் 96 டிஎம்சி நீர்: அப்போது தமிழக அரசின் தரப்பில் கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு 2023 ஜூன் மாதத்தில் இருந்து 2024 மே 13-ம் தேதி வரை கர்நாடக அரசு 175.712 டிஎம்சி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த காலகட்டத்தில் 79.208 டிஎம்சி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. இன்னும் 96.504 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது.

இதுதவிர, பிப்ரவரி முதல் மே 14-ம் தேதி வரை பிலிகுண்டுலுவில் 8.548 டிஎம்சி நீரை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 2.496 டிஎம்சி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதில் 6.052 டிஎம்சி நீர் இன்னும் நிலுவையில் உள்ளது.

தற்போது மேட்டூர் அணையில் 18.040 டிஎம்சி நீரே இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தினமும் 1500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தமிழகத்துக்கு மே மாதத்தில் வழங்க வேண்டிய 10 டிஎம்சி நீரில் 3.8 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள‌ 6.2 டிஎம்சி நீரையும், ஜூனில் தரவேண்டிய 9.17 டிஎம்சி நீரையும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக திறக்க வேண்டிய 2.5 டிஎம்சி நீரையும் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்" என வலியுறுத்த‌ப்பட்டது.

இதற்கு கர்நாடக அரசின் தரப்பில் கூறும்போது, ‘‘கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது. பிப்ரவரி முதல் மே மாதம் 2-வது வாரம் வரை மழை பொழியவில்லை. கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வருகிறது. தற்போது கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளில் குறைந்த அளவிலேயே நீர் உள்ளது. இந்த நீரைக் கொண்டே பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டால் கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். தற்போதைய சூழலில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட இயலாது'' என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தமிழக அரசு தரப்பில் கூறும்போது, ‘‘குறைந்த மழைப் பொழிவுக் காலங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 5.317 டிஎம்சி நீரையும், மே மாதத்துக்கான 2.5 டிஎம்சி நீரையும் கர்நாடகா திறந்துவிட வேண்டும்'' என வலியுறுத்தப்பட்டது. இதற்கு கர்நாடக அரசின் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

நீண்ட விவாதத்துக்கு பின்னர் காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா பேசும்போது, ‘‘உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி மே மாதத்தில் திறக்க வேண்டிய 2.5 டிஎம்சி நீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். அதேபோல சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக திறக்கப்படும் நீரையும், திறந்துவிட வேண்டும்'' என பரிந்துரை செய்தார்.

காவிரி ஒழுங்காற்று குழுவின் இந்த பரிந்துரைக்கு கர்நாடக விவசாய அமைப்பினரும், கன்னட அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கர்நாடக துணை முதல்வரும் நீர்வளத்துறை பொறுப்பு அமைச்சருமான‌ டி.கே.சிவகுமார் கூறும்போது, ‘‘கர்நாடகாவின் அணைகளில் நீர் இல்லாததால் குடிநீருக்கே சிரமம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்தில் நல்ல முறையில் மழை பெய்தால் நீரை திறந்துவிடுவோம்'' என்றார்.

மேலாண்மை ஆணைய கூட்டம்: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் மே 21-ம் தேதி டெல்லியில் உள்ள நீர்வளத்துறை அமைச்சகத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்குமாறு தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் நீர்வளத்துறை செயலர்கள், காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர்களுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்