காஷ்மீரில் ஜெய்ஷ் தீவிரவாதியின் 7 அசையா சொத்துகள் முடக்கம்: யுஏபிஏ சட்டத்தின் கீழ் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

ஜம்மு: காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் முக்கியதீவிரவாதி ஒருவரின் 7அசையா சொத்துகளை என்ஐஏமுடக்கியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பில் உறுப்பினராக சேர்ந்து காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட வந்த சர்தாஜ் அகமது மன்ட்டூ என்பவரை பாதுகாப்பு படையினர் கடந்த 2020, ஜனவரி 31-ம் தேதி கைது செய்தனர். அவரிடமிருந்து ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

குற்றப்பத்திரிகை தாக்கல்: இவருக்கு எதிராக 2020 ஜூலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆயுதங்கள் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், வெடி பொருட்கள் சட்டம், சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம், இந்தியவயர்லெஸ் டெலிகிராபி சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சர்தாஜ்அகமது விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) அவரது சொத்துகளை முடக்க ஜம்முவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில் புல்வாமா மாவட்டத்தின் கிசாரிகாம் என்ற இடத்தில் சர்தாஜ் அகமதுக்கு சொந்தமான 7 அசையா சொத்துகளை என்ஐஏ நேற்று முன்தினம் முடக்கியது.

கடந்த 2000 ஆண்டில் மவுலானா மசூத் ஆசார் தொடங்கிய ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு, ஜம்மு காஷ்மீர் உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.

என்ஐஏ ஒரு வாரத்துக்கு முன், ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் மற்றொரு முக்கிய தீவிரவாதியின் 6 அசையா சொத்துகளை முடக்கியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE