திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம் நீண்ட காலத்திற்கு முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இன்றைய பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த பலர் பிரிவினையை விரும்பவில்லை. ஆனால், பிரிவினை நிகழ்ந்தது. பிரிவினையால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தியா வந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று மகாத்மா காந்தி, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேல், முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், முதல் கல்வி அமைச்சர் மெளலானா ஆசாத் என நாட்டின் முதல் தலைமுறைத் தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர். அதோடு, அடுத்து வந்த நாட்டின் பிரதமர்கள் ஒவ்வொருவரும் இத்தகைய வாக்குறுதியை அளித்திருக்கிறார்கள். எனவே, இந்த சட்டம் முன்பே நிறைவேற்றப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பே குடியுரிமை வழங்கி இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
300 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்: முன்னதாக நேற்று, குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் (சிஏஏ) விண்ணப்பித்த 300 பேருக்கு, இந்திய குடியுரிமை சான்றிதழ்களை முதல்முறையாக மத்திய அரசு வழங்கியது. மதரீதியான துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் அடைக்கலம் புகுந்த அந்நாட்டு சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்கள் போன்றோருக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) வழிவகை செய்கிறது. இந்த சிஏஏ சட்டத்தை நிறைவேற்றுவோம் என கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வாக்குறுதி அளித்தது.
அதன்படி இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதிலிருந்து 2 நாட்களுக்குப் பின் இந்த சிஏஏ சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் 2019-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி ஒப்புதல் அளித்தார். இச்சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் என்பதால், இந்த சட்டத்தின் கீழ்முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தது. ஆனாலும் டெல்லியில் கடந்த 2019 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை நடந்த போராட்டத்தில் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கரோனா பெருந்தொற்று காரணமாக இதற்கான விதிகளை அறிவிக்க மத்திய அரசு 9 முறை கால அவகாசம் பெற்றது. இதனால் சிஏஏ சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் அரசிதழில் வெளியிடப்படாமல் இருந்தது.
» வாராணசியில் பிரதமர் மோடியை எதிர்த்த ஷ்யாம் ரங்கீலாவின் வேட்புமனு நிராகரிப்பு
» ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் காலமானார்
அரசிதழில் வெளியீடு: இந்நிலையில் சிஏஏ சட்டம் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலானது. சிஏஏ சட்டத்தின்படி யாருக்கு குடியுரிமை வழங்கலாம் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு பிரிவு முடிவு செய்யும் என மத்திய அரசு கூறியிருந்தது. இந்திய குடியுரிமை கோருபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் சிஏஏ சட்ட விதிமுறைகளின் படி இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவர்களின் மனுக்களை, டெல்லியில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவு இயக்குநர் தலைமையிலான குழு கடந்த 2 மாதங்களாக ஆய்வு செய்தது.
பெரும்பாலானோர் பாக். இந்துக்கள்: இதை தொடர்ந்து 300 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்க அந்த குழு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானில் இருந்து வந்த இந்துக்கள் ஆவர். இதையடுத்து அவர்களில் 14 விண்ணப்பதார்களுக்கு, இந்திய குடியுரிமை சான்றிதழ்களை மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நேற்று முதல்முறையாக வழங்கினார். குடியுரிமை பெற்றதற்காக அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அஜய் குமார் பல்லா, சிஏஏ சட்ட விதிகளின் சிறப்பம்சங்களையும் விளக்கினார்.
இந்திய குடியுரிமை சான்றிதழ் பெற்ற பாவனா என்பவர் நேற்று அளித்த பேட்டியில், “பாகிஸ்தானில் இருந்து நான் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியா வந்தேன். அங்கு பெண்கள் வெளியே சென்று படிப்பது சிரமம். இந்திய குடியுரிமை சான்றிதழ் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. நான் தற்போது 11-ம் வகுப்பு படிக்கிறேன். நான் மேல் படிப்பு படிப்பேன்” என்றார். சான்றிதழ் பெற்ற ஹரிஸ் குமார் என்பவர் கூறும்போது, “டெல்லியில் நான் 14 ஆண்டுகளாக வசிக்கிறேன். எனது கனவு நனவாகியுள்ளது. எனக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது. மத்திய அரசுக்கு நன்றி” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago