“மோடியின் ஓய்வுக்கு பிறகு அமித் ஷா தான் நாட்டின் பிரதமர்” - கேஜ்ரிவால் பேச்சு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்காலத்தில் பிரதமராக பதவியேற்க பிரதமர் நரேந்திர மோடி வழி வகுத்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் இன்று வியாழக்கிழமை லக்னோவில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கேஜ்ரிவால் பேசியதாவது, “இண்டியா’ கூட்டணிக்கு வாக்கு கேட்டு உத்தரப் பிரதேசத்துக்கு வந்துள்ளேன். 4 முக்கிய தலைப்புகளின் கீழ் பேசவுள்ளேன். முதலாவது, இந்த தேர்தலில் அமித் ஷாவுக்காக மோடி வாக்கு சேகரிப்பது. இரண்டாவது யோகி ஆதித்யநாத் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் பதவியில் இருந்து நீக்கப்படுவார். மூன்றாவது, அரசியல் அமைப்பை பாஜக மாற்றி எஸ்சி, எஸ்டி பிரிவுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முயற்சிப்பது. நான்காவது, ஜூன் 4-ஆம் தேதி இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வருவது.

அடுத்தாண்டு செப்டம்பர் 17-ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு 75 வயதாகிவிடும். அதன்பிறகு அமித் ஷாவை நாட்டின் பிரதமராக்க மோடி முடிவெடுத்துள்ளார். 75 வயதுடன் ஓய்வு பெற மாட்டேன் என்று பிரதமர் இதுவரை சொல்லவில்லை. பிரதமர் மோடி உருவாக்கிய இந்த விதியை அவரும் பின்பற்றுவார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது

தற்போதைய நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 220 இடங்களைத் தாண்டப் போவதில்லை. ஹரியாணா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு குறைந்த இடங்களே கிடைக்கும். இம்முறை பாஜக ஆட்சி அமைக்கப் போவதில்லை. இண்டியா கூட்டணியே ஆட்சி அமைக்கப் போகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE