ஆந்திராவில் 81.86 சதவீத வாக்குகள் பதிவு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

By என்.மகேஷ்குமார்


அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 13-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதுகுறித்து ஆந்திர தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் நடந்து முடிந்த தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மூலம் 80.66 சதவீதம், தபால் வாக்குகள் மூலம் 1.2 சதவீதம் என மொத்தம் 81.86 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. நாட்டில் நான்கு கட்டமாக நடந்துள்ள தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்குப் பதிவாகும்.

மேலும் ஆந்திர மாநில வரலாற்றிலேயே இவ்வளவு சதவீத வாக்குகள் இந்த தேர்தலில் தான் பதிவாகி உள்ளது. கடந்த 2014 தேர்தலில் 78.41 சதவீதமும், 2019 தேர்தலில் 79.77 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால் இம்முறை 81.86 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் அதிகபட்சமாக தர்மி சட்டப்பேரவை தொகுதியில் 90.91 சதவீதமும், குறைந்தபட்சமாக திருப்பதி சட்டப்பேரவை தொகுதியில் 63.32 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.

மக்களவைத் தொகுதிகளை பொருத்தவரை அதிகபட்சமாக ஓங்கோல் தொகுதியில் 87.06 சதவீதமும், குறைந்தபட்சமாக விசாகப்பட்டினத்தில் 71.11 சதவீதமும் வாக்குகள் பதிவானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE