“தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 தென் மாநிலங்களிலும் பாஜக வெற்றி உறுதி” - அமித் ஷா நேர்காணல்

By செய்திப்பிரிவு

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 தென் மாநிலங்களிலும் பாஜக இந்த முறை வெற்றியைப் பதிவு செய்வது உறுதி என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது தொடங்கி, மணிப்பூர் கலவரம், தேர்தல் பத்திர விவகாரம், தேசிய மக்கள் பதிவேடு வரையிலான பல்வேறு விஷயங்கள் குறித்தும் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் இருந்து சில பகுதி...

4 கட்டங்கள் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. மக்களவைத் தேர்தல் பற்றி இப்போது உங்களுடைய பார்வை என்ன? - “2014ல் மக்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு மாற்று வேண்டும் என்பதற்காக எங்களை ஆட்சியில் அமர்த்தினர். இப்போது 2024-ல் நாங்கள் செய்த சாதனைக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவுள்ளனர். இந்தத் தேர்தலில் 400+ சீட் பெறுவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பிரதமர் மோடி மீண்டும் சிறப்பான பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கப் போகிறார்.”

ஆனால், இந்தமுறை வாக்கு சதவீதம் குறைவாக இருப்பதாகக் கருத்துகள் நிலவுகின்றனவே? - “எனக்கும் கூட இந்த எண்ணம் இருந்தது. ஆனால், 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்தபோது நான் எனது சொந்தத் தொகுதியில் வாக்களிக்கச் சென்றேன். அப்போது அந்த எண்ணம் மாறியது. காந்திநகரில் நான் வெற்றி பெறுவதோ என் வாக்குசதவீதம் முன்பைவிட அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் வந்தது. காரணம், பாஜக வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். வாக்களிக்க வராதவர்கள் எல்லோரும் காங்கிரஸ் ஆதரவாளர்களே. தோல்வியை கணித்து அவர்கள்தான் வாக்களிக்க வருவதில்லை.”

இம்முறை பாஜக தென் மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. என்ன எதிர்பார்க்கிறீர்கள்? - “தமிழ்நாடு, கேரளாவிலும் இந்த முறை நாங்கள் சீட்கள் பெறுவது உறுதி. ஐந்து தென் மாநிலங்களையும் சேர்த்து பாஜக தனித்த பெரிய கட்சியாக வாகை சூடுவது உறுதி என்பதை நான் தெளிவாகத் தெரிவிக்கிறேன்.”

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏன் பாஜக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை? - “காஷ்மீரில் பாஜக அதிகாரம் செலுத்த முயற்சிப்பதாக சில விஷமப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. எங்களுக்கு எதிரான அந்தப் பிரச்சாரத்தை முறியடிக்கவே நாங்கள் இந்த முறை பாஜக வேட்பாளரை களமிறக்கவில்லை. முதலில் அங்கே பாஜகவை வலுப்படுத்துவோம் பின்னர் வேட்பாளரைக் களமிறக்குவோம் என முடிவு செய்தோம்.
சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு வரவேற்பு உள்ளது. அதற்கான சாட்சி தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதிவான வாக்கு சதவீதம். இதற்கு முன்னர் வெறும் 14% ஆக இருந்த வாக்கு சதவீதம் இம்முறை 37 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதைவிட முக்கியமாக முதன்முறையாக புலம் பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்டுகள் 40 சதவீதத்துக்கும் மேல் உள்ளோர் வாக்களித்துள்ளனர். முன்பெல்லாம் ஒற்றை இலக்க அளவிலேயே அவர்கள் வாக்களித்தனர்.”

மணிப்பூர் மாநிலத்தில் ஓராண்டுக்கும் மேலாக வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. அரசு ஏன் அதில் அழுத்தமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை? - “இது இனக் கலவரம். நம் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தாலும் கூட இந்தியாவில் இதுபோன்ற இனக் கலவரங்கள் முழுவதும் அடங்க ஓராண்டு காலமாவது அல்லது அதற்கும் மேல் ஆகியிருப்பதைப் பார்க்கலாம். கடந்த 7 மாதங்களாக அவ்வப்போது ஆங்காங்கே சில வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளனவே தவிர பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படவில்லை. தேர்தலுக்குப் பின் மணிப்பூர் முழு அமைதிக்கு என்ன செய்யலாம் என்பது பரிசீலிக்கப்படும்.”

தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு பாஜகவே அதிக அளவு நன்கொடை பெற்றது என்பதை அம்பலப்படுத்தியுள்ளதே! - “தேர்தல் நிதியைப் பொறுத்தவரையில் விகிதாச்சார முறையில் அணுக வேண்டும். பாஜக ரூ.6,060 கோடி தேர்தல் நிதி பெற்றிருக்கலாம். ஆனால் 13 மாநிலங்களில் எங்கள் ஆட்சி இருக்கின்றது. எங்களுக்கு 383 எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால் ஒரே ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருந்து கொண்டு வெறும் 35 எம்.பி.க்களே கொண்ட காங்கிரஸ் கட்சி ரூ.1609 கோடி தேர்தல் நிதி பெற்றுள்ளது. இந்த அடிப்படையில் எங்களுக்கு நிதி கிடைத்திருந்தால் நாங்கள் ரூ.20 ஆயிரம் கோடி பெற்றிருக்க வேண்டும்.”

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) பற்றி பாஜக தேர்தல் அறிக்கையில் இம்முறை ஏதும் அறிவிப்பு இடம்பெறாதது ஏன்? - “தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி நிறைய கருத்துகள் நிலவுகின்றன. இதுபற்றி விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. அதற்கான நேரம் வரும்போது அதைச் செய்வோம்.”

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியபோது பாஜகவினர் வளர்ச்சி பற்றி பேசினர். ஆனால் அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள் நகர நகர மாங்கல்யம் பற்றியும், இந்து - முஸ்லிம் சர்ச்சை பற்றியும் பேசுகின்றனர். இது பற்றிய விவாதங்கள் பற்றி உங்கள் கருத்து...

“நாங்கள் எப்போதுமே வளர்ச்சி பற்றி தவறாமல் பேசுகிறோம். ஆனால் சிலர் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு பற்றி பேசுகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைவிடுவது பற்றிப் பேசுகிறார்கள். ஷரியா சட்டத்தைப் பற்றி பேசுகின்றனர். அப்போதெல்லாம் நாங்கள் அவர்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. அதனால் பேசுகிறோம். நாட்டின் வளர்ச்சியைப் போல் இந்த விஷயங்களும் அவசியமானவையே. இதை எப்படி மதவாதம் என்று கூறமுடியும்!”

ஆனால், உங்களுடன் கூட்டணி வைத்துள்ள தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவே முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டில் உறுதியாக இருப்பதாகக் கூறுகிறாரே? - “அரசியல் சாசனத்தை இறுதி செய்யும்போது முஸ்லிம் இடஒதுக்கீடு பற்றியெல்லாம் விவாதங்கள் நடந்துள்ளன. அரசியல் சாசனப்படி மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு அனுமதியில்லை. நெருக்கடி காலத்தில் அவர்கள் அரசியல் சாசனத்துக்கான முகவுரையை மாற்றியுள்ளனர்.”

நேர்காணல்: நிஸ்துலா ஹெப்பார் | தமிழில்: பாரதி ஆனந்த்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE