வாராணசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்: 12 மாநில முதல்வர்கள், கூட்டணி தலைவர்களுடன் பேரணி

By செய்திப்பிரிவு

வாராணசி: மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் போட்டியிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக கங்கை கரையில் வேத மந்திரங்கள் ஒலிக்க பூஜை செய்த பிரதமர் மோடி, பின்னர் கால பைரவரை வழிபட்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடியுடன், 12 மாநில முதல்வர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் 7-வது மற்றும் இறுதி கட்டமாக ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி வாராணசியில் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். நேற்று பகல் வாராணசி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்கு தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ராஜலிங்கத்திடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அபிஜித் முகூர்த்தம் என்ற அரிதான முகூர்த்த நேரத்தில் பிரதமர் வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமரின் வேட்புமனுவை 4 பேர் முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளனர். அப்போது பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மாநிலத் தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங் ஆகியோரும் சென்றிருந்தனர்.

வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், எஸ்பிஎஸ்பி கட்சித் தலைவர் பிரகாஷ் ராஜ்பர், எல்ஜேபி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, பசுபதி பாஸ்வான் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாஜக மாநிலத் தலைவர்கள் பேரணியாக சென்றனர். இந்தப் பேரணியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.

பேரணியில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் நட்டா, பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் நடந்து சென்றனர்.

வாராணசியில் ஏற்கெனவே 2014, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது 3-வது முறையாக அவர் அதே தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

கங்கை கரையில் ஆரத்தி: வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக, கங்கைக் கரையில் உள்ள தசாஅஸ்வமேத் படித்துறையில் புனித நீராடிய பிரதமர் மோடி, சிறப்புப் பூஜைகளும் செய்தார். பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, கங்கைக் கரை படித்துறையில் ஆரத்தியும் எடுத்தார்.

பின்னர் அங்குள்ள சுவாமி விவேகானந்த் ரோ-ரோ படகு மூலம் நமோ படித்துறைக்குச் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள கால பைரவர் கோயிலில் வழிபட்டார்.

கங்கா சப்தமி தினம்: மே 14-ம் தேதியான நேற்று கங்கா சப்தமி தினமாகும். இது இந்துக்களை பொறுத்தமட்டில் மிகச்சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது. கங்கா சப்தமி தினத்தில் கங்கை நதி நேரடியாக பூமிக்கு வருவதாக நம்பப்படுகிறது. அதனால்தான் இந்த நாளைத் தேர்வு செய்து பிரதமர் மோடி மனு தாக்கல் செய்தார் என்று தெரியவந்துள்ளது.

6 கி.மீ. தூர வாகனப் பேரணி: முன்னதாக வாராணசியில் நேற்று முன்தினம் மாலை நடந்த வாகனப் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். 6 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்தப் பேரணியில் பிரதமர் மோடிக்கு வழிநெடுக மக்கள் மலர்களைத் தூவி வரவேற்றனர்.

வாராணசியின் லங்கா பகுதியில் உள்ள மதன்மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பிரதமர் தனது வாகனப் பேரணியை தொடங்கினார். காசி விஸ்வநாதர் கோயில் வரை இந்த பேரணி நடைபெற்றது. காவி உடை அணிந்த ஏராளமான பெண்கள் பிரதமர் மோடியின் வாகனத்துக்கு முன் அணிவகுத்து வாழ்த்து கோஷம் எழுப்பியவாறு சென்றனர்.

சாலை நெடுகிலும் பாஜக தொண்டர்களும், பொதுமக்களும் மலர்களை தூவியும் முழக்கமிட்டும் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர். 100 இடங்களில் பிரதமர் மோடிக்கு மேள தாளங்கள், சங்குகள் முழங்க மகத்தான வரவேற்பை அளித்தனர்.

கடந்த தேர்தல்கள்: 2014 தேர்தலில் பிரதமர் மோடி குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், வாராணசி தொகுதியிலும் போட்டியிட்டார். இதில், வதோதரா தொகுதியில் ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், வாராணசியில் ஏறக்குறைய 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றார். பின்னர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

2019-ல் வாராணசியில் மீண்டும் போட்டியிட்ட மோடி, சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

‘கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான்'

பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது: கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான். எனது தாய் மறைவுக்குப் பின்னர் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி, தாயைப்போல் அனைவரையும் காக்கிறது. காசியுடன் எனது உறவானது அற்புதமானது, பிரிக்க முடியாதது மற்றும் ஒப்பிடமுடியாதது. அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்றுதான் என்னால் சொல்ல முடியும். 140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுள் உத்தரவு. காசி மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை எனது முயற்சியாக கொண்டுள்ளேன். பகவான் காசி விஸ்வநாதரின் ஆசியுடன், அவருடைய காசிக்கு சேவை செய்ய நான் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பேன். இவ்வாறு பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி: பிரதமர் மோடி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.3.02 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். ரொக்கமாக அவரிடம் ரூ.52,920 உள்ளது. சொந்தமாக நிலம், வீடு, கார் இல்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 2018-19-ம் நிதியாண்டில் ரூ.11 லட்சத்தில் இருந்து 2022-23-ல் ரூ.23.5 லட்சம் என 2 மடங்காக உயர்ந்துள்ளது. எஸ்பிஐ கிளையில் பிரதமருக்கு ரூ.2,85,60,338 மதிப்பிலான நிலையான வைப்புத்தொகை உள்ளது. பிரதமரிடம் ரூ.2,67,750 மதிப்பிலான 4 தங்க மோதிரங்கள் உள்ளன. பிரதமர் சொத்து மதிப்பு 2019-ஐ விட சுமார் ரூ.50 லட்சம் உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE