கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணா ஜாமீனில் விடுதலை

By செய்திப்பிரிவு

பெங்களூரு: பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணா, ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் மகனும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஹெச்.டி.ரேவண்ணா, தங்கள் வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டார். முன்னதாக, அவருக்கு முன் ஜாமின் கோரப்பட்டது. அதனை விசாரித்த மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ரேவண்ணா, பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி நேற்று மாலை உத்தரவிட்டது. இதையடுத்து, சிறையில் இருந்து இன்று அவர் வெளியே வந்தார்.

சிறை வளாகத்தில் காத்திருந்த மதச்சார்பற்ற ஜனதா தளத் தொண்டர்கள், அவரை வரவேற்றனர். சிறையில் இருந்து நேராக பெங்களூரு பத்மநாபா நகரில் உள்ள தனது தந்தை தேவகவுடாவின் வீட்டிற்குச் சென்றார். தேவகவுடாவின் இல்லத்திற்கு வெளியேயும் தொண்டர்கள் திரண்டனர். ரேவண்ணாவை, அவரது சகோதரரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலத் தலைவருமான ஹெச்.டி. குமாரசாமி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.மகேஷ், "ரேவண்ணா தற்போது உடைந்து போயுள்ளார். இந்த வழக்கில் அவர் சிக்கவைக்கப்பட்டுள்ளதால் அவர் வேதனை அடைந்துள்ளார். அவரை கைது செய்தது அரசியல் சதி என்று கட்சியும் நினைக்கிறது'' என தெரிவித்தார்.

ஜாமீனில் வெளிவந்துள்ள ரேவண்ணா நாளை (மே 15) தனது சொந்த தொகுதியான ஹோலனர்சிபூருக்குச் செல்வார் என்று கூறப்படுகிறது.

தனது வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த ஒரு பெண்ணை, கடத்தியதாக ரேவண்ணா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள அதேநேரத்தில், அந்த பெண்ணை அவரது மகனும் ஹசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டை அடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE