3-வது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால் எதிர்காலத்தில் தேர்தலே இருக்காது: கார்கே எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால் எதிர்காலத்தில் தேர்தலே இருக்காது என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை செய்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியில் நேற்று நடைபெற்ற இண்டியா கூட்டணி பிரச்சாரக் கூட்டத்தில் கார்கே பேசியதாவது:

பாஜக கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி கொடுத்தவர்களுக்கு, வியாபாரம், தொழிலை வழங்கியதன் மூலம்அவர்களை மேலும் பணக்காரர் களாக்கியுள்ளார் பிரதமர் மோடி.

நாட்டில் ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் அச்சுறுத்தல் வந்துவிட்டது. பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்றால் எதிர்காலத்தில் தேர்தல் என்ற ஒன்றே இருக்காது. தேர்தலை ஒழித்து விடுவார்கள்.

ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை கைதுசெய்யும் தைரியம் பிரதமர் மோடிக்கு இருக்கிறது. அதேபோல் தொழிலதிபர்கள் அதானியையும், அம்பானியையும் ஏன் கைது செய்யவில்லை? இண்டியா கூட்டணிகட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக பாஜக அரசு கைது செய்து வருகிறது. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் விடுவிக்கப்படுவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE