குடியுரிமை திருத்த சட்டத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது: மோடி திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) யாராலும் ரத்து செய்ய முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலம் பாரக்பூரில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, பிரதமர் மோடி, மேற்கு வங்க மக்களுக்கு 5 உத்தரவாதங்களை அளித்தார்.

பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: மேற்கு வங்க மக்களுக்கு நான் ஐந்து உத்தரவாதங்களை அளிக்க விரும்புகிறேன். மதத்தின் அடிப்படையில் யாரும் இடஒதுக்கீடு பெற முடியாது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டை யாரும் தொட முடியாது. ராம நவமி கொண்டாடுவதை யாரும் தடுக்க முடியாது.

உச்ச நீதிமன்றத்தின் ராமர் கோயில் தீர்ப்பை மாற்ற முடியாது, சிஏஏ சட்டத்தை யாராலும் திரும்பபெற முடியாது. இதுவே மக்களுக்கு நான் அளிக்கும் 5 உத்தரவாதங்களாகும்.திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்கத்தில் உள்ள இந்துக்களை அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறிவிட்டனர்.

பலருக்கும் குடியுரிமையை வழங்கும் சிஏஏ சட்டத்தை காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வில்லனாக சித்தரித்துள்ளன. சிஏஏ என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமையை வழங்கும் ஒரு சட்டமாகும். யாருடைய குடியுரிமையையும் மத்திய அரசு ரத்து செய்யாது. இதை எதிர்ப்பவர்கள் பொய்யர்கள்.

ஒரு காலத்தில் மேற்கு வங்கத்தில் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஆனால் இன்று நடைபெற்று வரும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. முன்பெல்லாம், ஊடுருவல்காரர்களுக்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சியே நடந்தது. ஆனால் இப்போது திரிணமூல் காங்கிரஸ் உதவியுடன் ஊடுருவல்காரர்கள் அத்துமீற தொடங்கியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாகிவிட்டது. திரிணமூல் காங்கிரஸ் குண்டர்கள் சந்தேஷ்காலி பெண்களை அச்சுறுத்துகின்றனர். மக்களின் ஆசீர்வாதத்தை நான் பெற்று வருகிறேன். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை விட இந்தத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெறப் போகிறது. மேற்கு வங்கம் எங்களுக்கு முக்கியமான மாநிலம்.

இங்கு கனிம வளங்கள் அதிகம் உள்ளன. இந்த மாநிலங்களுக்கு சுற்றுலா வாய்ப்பும் உள்ளது. இங்கு மாநில அரசு ராமநவமியை கொண்டாட மக்களை அனுமதிக்கவில்லை. இந்துக்களை மோசமாக நடத்துகின்றனர். இந்த நிலை மாற பாஜகவுக்கு மேற்கு வங்க மக்கள் வாக்களிக்கவேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE