விசா இல்லாமல் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு சென்றது எப்படி? - தூதரக பாஸ்போர்ட்டை முடக்க கர்நாடக அரசு முயற்சி

By இரா.வினோத்


பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் கடந்த 26ம் தேதி வெளியாயின. இதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பியோடினார்.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 3 பெண்கள் அளித்த புகாரின்பேரில் அவர்மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தேவகவுடாவின் மூத்த‌ மகனும் மஜத எம்எல்ஏவுமான‌ ரேவண்ணா (66) கைது செய்யப்பட்டார்.

ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வலை பிடிக்கும் முயற்சியில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் இறங்கியுள்ளனர். அவருக்கு 2 முறை லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ள அதிகாரிகள், அவர் வைத்துள்ள தூதரக பாஸ்போர்ட்டைமுடக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் பிரஜ்வல் வேறு நாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க உதவுமாறு சிபிஐ இயக்குநரகத்தின் உதவியை கோரியுள்ளனர். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் பிரஜ்வலுக்கு புளூ கார்னர் நோட்டீஸ் விடுத்துள்ளது.

மக்களவை உறுப்பினர் என்ற முறையில் பிரஜ்வல் ரேவண்ணா, தூதரக பாஸ்போர்ட் வைத்துள்ளார். வெளியுறவு அமைச்சகம் நேரடியாக வழங்கும் இந்த பாஸ்போர்ட் பொதுவாக தூதரக முக்கிய‌ அதிகாரிகள், வெளிநாட்டில் அரசுப் பணி மேற்கொள்வோர், வெளியுறவு துறையின் இணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.

இத்தகைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் சில நாடுகளுக்கு விசா இல்லாமலே செல்ல முடியும். அங்கு 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும்.

அதேவேளையில் மோசடி வழக்கில் சிக்கி 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் தூதரக பாஸ்போர்ட் திரும்பப் பெறப்படும்.

அதேபோல நீதிமன்ற உத்தரவு இல்லாவிட்டாலும் தூதரக பாஸ்போர்ட்டை முடக்கலாம் என சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE