“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது” - அமித் ஷா @ உ.பி

By செய்திப்பிரிவு

லக்னோ: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோசாம்பி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வினோத் சோங்கரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் தெரிவித்தது. “பாகிஸ்தான் வசம் அணுகுண்டு உள்ளதால் அவர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மணி சங்கர் அய்யரும், ஜம்மு காஷ்மீரின் ஃபாரூக் அப்துல்லாவும் தெரிவித்துள்ளனர். அதோடு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கேட்க வேண்டாம் என்றும் சொல்லியுள்ளனர். ராகுல் காந்தி வேண்டுமானால் அணுகுண்டை பார்த்து அஞ்சலாம். எங்களுக்கு அச்சம் இல்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அதை நிச்சயம் மீட்போம்.

இந்த தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் மூன்று ஹாட்ரிக் வெற்றியை தர வேண்டும். மூன்றாவது முறையாக நரேந்திர மோடியை பிரதமராக தேர்வு செய்வது, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் என மூன்று கட்சிகளையும் மூன்றாவது முறையாக முற்றிலும் வீழ்த்துவது, மூன்றாவது முறையாக வினோத் வினோத் சோங்கரை எம்.பி-யாக வெற்றி பெற செய்வது” என அமித் ஷா தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் மணி சங்கர் அய்யர், பாகிஸ்தான் குறித்து பேசிய வீடியோ கவனம் பெற்றது. அது பழைய வீடியோ என அவரே விளக்கம் கொடுத்திருந்தார். இந்தாலும் பாஜகவினர் அவரது கருத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சனிக்கிழமை அன்று பிரதமர் மோடி தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE