உலகின் மிகப்பெரிய இந்து மத தார்மீக அறக்கட்டளையாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளங்கி வருகிறது. இந்நிலையில் ஆந்திர அரசு புதிதாக நியமனம் செய்துள்ள அறங்காவலர் குழு பற்றி பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இக்குழுவில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வை நியமித்திருப்பதற்கு பல்வேறு இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இக்குழுவில் தமிழகத்துக்கு வாய்ப்பு வழங்கப்படாததை திருப்பதி எம்.பி. வரப்பிரசாத் ராவ் கண்டித்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வேற்று மதத்தைச் சேர்ந்த 44 பேர் ஏற்கெனவே பணியாற்றி வருகின்றனர். ஒரு மிகப்பெரிய தார்மீக அமைப்பில் வேற்று மதத்தவரை எப்படி ஊழியர்களாக நியமனம் செய்யலாம் என பல்வேறு இந்து அமைப்புகள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன. இதையடுத்து, விளக்கம் கேட்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விவகாரம் இப்போது உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சுமார் ஓராண்டு கழித்து தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இக்குழுவில் விசாகப்பட்டினம் மாவட்டம், பயகர ராவ்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினரும் கிறிஸ்தவருமான வி.அனிதாவும் இடம்பெற்றுள்ளார். இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவரை அறங்காவலர் குழுவுக்கு எப்படி நியமனம் செய்யலாம் என பல்வேறு இந்து அமைப்புகள், மடாதிபதிகள், பீடாதிபதிகள் போர்க் கொடி தூக்கி உள்ளனர். மேலும், தான் கிறிஸ்தவர்தான் என அனிதாவே கூறுவது போன்ற வீடியோவும் சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் வேகமாக பரவி வருகிறது.
பாஜக அமைச்சர் மனைவிக்கு பதவி
மேலும், மகாராஷ்டிர மாநில நிதி அமைச்சர் (பாஜக) சுதிர் முங்கந்திவாரின் மனைவி சப்னா முங்கந்திவாரும் புதிய அறங்காவலர் குழுவில் இடம்பெற்றுள்ளார். இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஜனசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. “ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத காரணத்தால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர மாநில பாஜக அமைச்சரின் மனைவி சப்னாவுக்கு திருப்பதி அறங்காவலர் குழு வில் எப்படி வாய்ப்பு அளித்தார்? அப்படியெனில், கூட்டணி முறிவு என்பது வெறும் நாடகமா ? இப்போதும் சந்திரபாபு நாயுடு, பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளார் என்பதற்கு இதுவே சாட்சி” என எதிர்க்கட்சியினர் சரமாரியாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதுவும் சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இதுபோல திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில், பக்கத்து மாநிலமான தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உறுப்பினர் பதவி வழங்கப்படுவது வழக்கம். இது காங்கிரஸ் ஆட்சியிலும் தெலுங்கு தேசம் ஆட்சியிலும் நீடித்து வருகிறது. ஆனால், இம்முறை திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் நாயுடு வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால் தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது என்ன நியாயம் ?
இந்து தர்ம போராட்ட சமிதியின் தலைவர் நவீன் குமார் ரெட்டி நேற்று திருப்பதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பதி தேவஸ்தானத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், இம்முறை ஆந்திர முதல்வர் சிலரை அறங்காவலர் குழுவுக்கு நியமனம் செய்துள்ளார். இது மிகவும் கண்டிக்க தக்கதாகும். குறிப்பாக, நான் கிறிஸ்தவர்தான் என்றும் பைபிளை எப்போதும் என்னுடன் வைத்திருப்பேன் என்றும் கூறியவரை, இந்து தர்ம அமைப்பான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவுக்கு நியமனம் செய்யலாமா? இதனால் கிறிஸ்தவர்களை புண்படுத்துவதாக கருத வேண்டாம்.
இந்து மதம் சம்பந்தப்பட்ட தேவஸ்தானத்துக்கு அறங்காவலர் குழுவுக்கு அந்த மதத்தைச் சேர்ந்தவரை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும். இதுதான் நியாயம். மேலும் இக்குழுவில், போலாவரம் அணை கட்டும் திட்டத்தில் ‘பிளாக்’ லிஸ்டில் உள்ள ஒரு எம்பி, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அளித்த நிலங்களை அபகரித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒரு எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு தகுதியானவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், அனிதா வேற்று மதத்தைச் சேர்ந்தவர்தானா? என்பது குறித்து உடனடியாக விசாரித்து விளக்கம் அளிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தவிட்டுள்ளார்.
தமிழகத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததைத் கண்டித்து திருப்பதி மக்களவை தொகுதி உறுப்பினர் (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்) வரப்பிரசாத் ராவ் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமா நிலுவையில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் ஆட்சியரான ராவ், திருப்பதியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வேற்று மதத்தைச் சேர்ந்த, தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வை அறங்காவலர் குழு உறுப்பினராக முதல்வர் சந்திரபாபு நியமனம் செய்துள்ளார். இது உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு எதிரான செயல். ஒரு கிறிஸ்தவ அமைப்பிலோ, இஸ்லாம் அமைப்பிலோ வேற்று மதத்தவர் யாராவது உறுப்பினராக முடியுமா? அப்படியிருக்க உலகப் புகழ் பெற்ற திருப்பதி தேவஸ்தானத்தில் மட்டும் இதற்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்.
வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள், ‘தனக்கு பெருமாள் மீது நம்பிக்கை உள்ளது’ என தேவஸ்தான பதிவேட்டில் தெரிவித்து விட்டுத்தான் இந்தக் கோயிலுக்குள்ளேயே செல்ல முடியும். அப்படியிருக்க, இதன் அறங்காவலர் குழு உறுப்பினராக வேற்று மதத்தினர் எப்படி பதவி வகிக்க முடியும்? முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, பாஜகவுடனான கூட்டணி முறிந்து விட்டதாகக் கூறி, மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த சந்திரபாபு நாயுடு, இப்போது, மகாராஷ்டிர மாநில நிதி அமைச்சரின் மனைவிக்கு திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி வழங்கி உள்ளார். இதன் பின்னனி என்ன?
தினமும் திருமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் சுமார் 50 முதல் 60 சதவீதம் வரை தமிழர்கள். இப்படி இருக்கும்போது, தமிழர்களுக்கு ஏன் இம்முறை வாய்ப்பு வழங்கவில்லை?
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி நோட்டீஸ் கொடுத்தனர். அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் போராடினர். இந்தப் போராட்டத்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என சந்திரபாபு நாயுடு கூறி வருகிறார். இதனால்தான் இம்முறை தமிழ்நாட்டுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை என்பது என்னுடைய கருத்து. இது மிகவும் தவறாகும். கடவுள் சம்மந்தப்பட்ட விஷயத்தில், அரசியல் செய்யக்கூடாது. அறங்காவலர் குழு பதவியை ஒரு மாநிலத்துக்கு ஒரு முறை வழங்காவிட்டால் மற்றொரு முறை பெறுவது கடினமாகி விடும். இவ்வாறு வரப்பிரசாத் ராவ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago