சத்தீஸ்கர் என்கவுண்டரில் 12 மாவோயிஸ்டுகள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ராய்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்திய என்கவுண்டரில் மாவோயிஸ்டுகள் 12 பேர் கொல்லப்பட்டனர்.

இது பற்றி பிஜாப்பூர் காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார்யாதவ் கூறியதாவது: மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பிடியா வனப்பகுதியில் 150 மாவோயிஸ்டுகள் நடமாடுவதாக துப்பு கிடைத்தது. இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் அந்த பகுதியை 800-க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் கூட்டாக இணைந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். பல்வேறு திசைகளிலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பதிலுக்கு 6 பகுதிகளில் பதுங்கி இருந்து மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கிட்டத்தட்ட 12 மணி நேரம் இருதரப்புக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு நீடித்தது.

இதில் பிஜாப்பூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் என்கவுண்டர் நடைபெற்றது. தாக்குதலுக்குப் பின்னர் மாவோயிஸ்டுகளின் கூடாரம் அழிக்கப்பட்டது.

12 துப்பாக்கிகள், நாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்துகள், மாவோயிஸ்ட்டுகளின் சீருடைகள், பத்திரிகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 12 மாவோயிஸ்டுகளின் சடலங்கள் கைபற்றப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறும்போது, "நமது பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்துகள். நாம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நக்சல் பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிரமாக போராடி வருகிறோம். நக்சல் பயங்கரவாதத்தை சீக்கிரம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விருப்பமாக உள்ளது. இந்த இரட்டை எஞ்சின்சர்காரின் பலனை நாம் அனுபவித்து வருகிறோம்" என்றார்.

சத்தீஸ்கரில் இந்த ஆண்டில் இதுவரை 103 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE