பட்டாசு தொழிலாளர்கள் அச்சம்!: சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள மகேஸ்வரி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை காலை 6:15 மணி அளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. அதிகாலை நேரத்தில் தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு முன்பு வெடி விபத்து ஏற்பட்டதால் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. அதேவேளையில், கடந்த 6 நாட்களுக்குள் நடந்த 4-வது விபத்து இது என்பதால் பட்டாசு தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
அண்மையில் செங்கமலபட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்ததனர். அந்த ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையான ‘பெசோ’ உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, பட்டாசு விபத்துகள் தொடரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள் உரிமம், தொழிலாளர் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு தொழிலாளர் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மே 15 வரை கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் மே 15 வரை பரவலாக மழை வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையைப் பொறுத்தவரையில்,
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 14-ல் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வரும் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படவுள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
“மோடி என்னிடம் கற்றுக்கொள்ள வேண்டும்” - கேஜ்ரிவால்: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் இடைக்கால ஜாமீனில் திஹார் சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை வெளியே வந்திருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், சனிக்கிழமை டெல்லியில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஊழலுக்கு எதிராக நான் போராடுகிறேன் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால், ஊழல்வாதிகள் அனைவரும் பாஜகவில் இணைகிறார்கள். அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஊழலை எதிர்த்துப் போராட விரும்பினால், பிரதமர் மோடி என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
எல்லா திருடர்களும் பொய்யர்களும் பாஜகவில் சேர்ந்துவிட்டார்கள். அவர்களின் வழக்குகளும் மறைந்துவிட்டன. எதிர்க்கட்சிகளுக்கு ஒரு செய்தியை சொல்வதற்காகவே அவர்கள் என்னை கைது செய்தனர். கேஜ்ரிவாலைக் கைது செய்ய முடியும்போது, யாரையும் கைது செய்ய முடியும் என்பதே அந்தச் செய்தி" என்று தெரிவித்தார்.
‘இரு சித்தாந்தங்களுக்கு இடையே மோதல்’ - அமித் ஷா: “இந்த தேர்தல் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் மட்டுமல்ல; இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதலும்கூட. நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு பக்கம். ராகுல் காந்தி தலைமையில் இண்டியா அணி மற்றொரு பக்கம்” என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
“சொந்த நாட்டை காங்கிரஸ் அச்சுறுத்துகிறது” - பிரதமர் மோடி: “மீண்டும் மீண்டும் காங்கிரஸ் கட்சி இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. பாகிஸ்தான் வசம் அணுகுண்டு உள்ளதை பாருங்கள் என அவர்கள் சொல்கிறார்கள். அதாவது நம் நாட்டின் மீதான தாக்குதல் குறித்து பேசுகிறார்கள். குண்டுகளை தன்வசம் வைத்துள்ள பாகிஸ்தான் நாட்டின் நிலையைப் பாருங்கள். தங்கள் குண்டுகளை விற்பனை செய்ய முயல்கிறார்கள். வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. ஏனெனில், அவர்களது தரம் குறித்து அனைவரும் அறிந்ததே” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் அய்யரின் கருத்துக்கு பிரதமர் மோடி பதிலடி தந்துள்ளார்.
“நரேந்திர மோடி ஓர் அரசர்...” - ராகுல் காந்தி விமர்சனம்: “நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகப் போவதில்லை என்பதை எழுத்துபூர்வமாகவே எழுதி தருகிறேன். நரேந்திர மோடி ஓர் அரசர். அவர் ஒரு நாட்டின் பிரதமர் அல்ல” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மேலும், “நாம் அனைவரும் அரசியலமைப்பை பாதுகாக்கிறோம். அரசியல் சாசனத்துக்காக காங்கிரஸ் கட்சியினர் தங்கள் உயிரைக் கொடுத்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தே நாம் உரிமைகளைப் பெற்றுள்ளோம். நரேந்திர மோடி அரசியலமைப்பை ஒழிக்க விரும்புகிறார். ஆனால், உலகில் எந்த சக்தியாலும் அதை ஒழிக்க முடியாது. ஏழைகளின் குரலுக்கு செவிசாய்க்கக் கூடிய, பலவீனமானவர்களுக்கு துணை நிற்கக் கூடிய, யாருக்கும் அஞ்சாத ஓர் அரசுதான் நாட்டுக்குத் தேவை” என்று ராகுல் காந்தி பேசினார்.
‘மோடியும், நவீன் பட்நாயக்கும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்’: பிரதமர் மோடியும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் பாஜகவும், பிஜேடியும் ஒருவருக்கொருவர் கூட்டாளிகள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி யோசனை: தைரியம், உறுதிப்பாடு ஆகிய பண்புகளை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து பிரதமர் நரேந்திர மோடி உள்வாங்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா பேசினார்.
T20 WC: தொடக்க ஆட்டக்காரர் குறித்து கங்குலி யோசனை: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலியை களம் காண செய்யலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதை அணி நிர்வாகம் செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு கால அட்டவணை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், தேர்வை எழுத இயலாமல் போனவர்கள் மீண்டும் எழுத விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. துணைத் தேர்வுக்கான கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 16 முதல் ஜூன் 01-க்குள் விண்ணப்பிக்கலாம்.
“மோடிதான் நாட்டை வழிநடத்துவார்”: “இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். 2029 வரை பிரதமர் நரேந்திர மோடிதான் நாட்டை வழிநடுத்துவார்” என்று கேஜ்ரிவாலுக்கு பதிலளிக்கும் வகையில் அமித் ஷா கூறினார். முன்னதாக, டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், “இந்த தேர்தலில் ஒருவேளை பாஜக வெற்றி பெற்றால் அமித் ஷாதான் பிரதமராவார்” என கூறி இருந்தார்.
ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: மம்தா சரமாரி கேள்வி : பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸை விமர்சித்துள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “அவர் ஏன் இன்னும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பது குறித்து விளக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்து - முஸ்லிம் பிரிவினையை உருவாக்க மோடி முயற்சி: “மூன்று கட்ட மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மோடி மீண்டும் பிரதமராவது மிகவும் கடினமாக இருக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவர் தனது 10 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டு இந்து - முஸ்லிம் பிரிவினையை உருவாக்க முயற்சிக்கிறார்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
பட்டாசு ஆலை பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?: “உரிமம் யார் பெயரில் உள்ளதோ, அவருக்கு தான் பட்டாசு ஆலை பாதுகாப்பு குறித்த முழு பொறுப்பும் உள்ளது. ஆலையின் அனைத்து நடவடிக்கைகளும் உரிமையாளர் மற்றும் போர்மேனுக்கு தெரிந்திருக்க வேண்டும். குத்தகைக்கு விடப்பட்ட பட்டாசு ஆலையில் விபத்து நடந்தால், உரிமம் யார் பெயரில் உள்ளதோ அவர்தான் பொறுப்பு” என்று ‘பெசோ’ அதிகாரி விளக்கம் அளித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago