இந்து - முஸ்லிம் பிரிவினையை உருவாக்க மோடி முயற்சி: கார்கே குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “பிரதமர் மோடி அடுத்த முறை இந்தியாவில் ஆட்சி அமைப்பது மிகவும் கடினம்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

பிஹாரில் இண்டியா கூட்டணி தலைவர்களுடன் இணைந்து கார்கே செய்தியாளர்களிடம் பேசியபோது, “மோடி தெலுங்கானாவுக்கு அருகில் இருந்தபோது நான் ஆந்திராவில் பேரணிகளில் உரையாற்றிக் கொண்டிருந்தேன். கடந்த காலத்தில் அவரது பேச்சில் இருந்த பெருமை தற்போது தென்படவில்லை.

மூன்று கட்ட மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மோடி மீண்டும் பிரதமராவது மிகவும் கடினமாக இருக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவர் தனது 10 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டு இந்து - முஸ்லிம் பிரிவினையை உருவாக்க முயற்சிக்கிறார்” என்றார்.

இதனிடையே, பிஹார் சமஸ்திபூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே, “காங்கிரஸ் சுதந்திரத்துக்காக பாடுபட்டதால்தான் மோடி இந்தியாவின் பிரதமராக முடிகிறது. முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் நாட்டின் ஒற்றுமைக்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தனர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE