சிறுவயது மகனை வாக்களிக்கச் சொன்ன பாஜக தலைவர் மீது வழக்குப் பதிவு

By செய்திப்பிரிவு

மத்திய பிரதேசத்தில் கடந்த 7-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது பாஜக கட்சித் தலைவர் ஒருவர் தனது சிறுவயது மகனை வாக்குச் சாவடிக்கு அழைத்துச் சென்று, தனக்கு பதிலாக தன் மகனை வாக்களிக்கச் சொல்லி அதை வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பாஜக தலைவர் மீதுமத்திய பிரதேச காவல்துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது. மேலும், வாக்குக்குச் சாவடி அதிகாரியும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசம் போபாலில் உள்ள பெரசியா வாக்குச் சாவடியில் பாஜகவைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் தனது சிறுவயது மகனை அழைத்துச் சென்றுள்ளார். அவர் தனக்குப் பதிலாக தன் மகனை வாக்களிக்கச் சொல்ல, வாக்குப் பதிவு இயந்திரத்தில் அந்தச் சிறுவன் பாஜக சின்னம் பொறித்த பொத்தானை அழுத்துகிறான்.

அதையடுத்து விவிபேட் இயந்திரத்தில் வாக்குப் பதிவானது உறுதி செய்யப்படுகிறது. ‘இப்போதைக்கு இது போதும்’ என்று தன் மகனிடம் அவர் கூறுகிறார். இந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்திலும் அவர் பதிவிட்டார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வீடியோ குறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தின் ஊடக ஆலோசகர் கூறுகையில், “பாஜக தலைவர் ஒருவர் தன் மகனை அழைத்துச் சென்று வாக்களித்து அதை வீடியோகவும் சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார். தேர்தல் ஆணையத்தை பாஜக விளையாட்டுப் பொருளாக மாற்றிவிட்டது” என்று தெரிவித்தார்.

இவ்விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அந்த பாஜக தலைவர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் வாக்குச் சாவடி அதிகாரி சந்தீப் சைனியும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வருவதாகவும், விதிமீறல் செய்யப்பட்டது உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE