செய்தித் தெறிப்புகள் @ மே 10: கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் முதல் மணி சங்கர் அய்யர் சர்ச்சை வரை

By செய்திப்பிரிவு

கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில், அவருக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 2-ஆம் தேதி நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கன்னா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு சில முக்கிய நிபந்தனைகளையும் விதித்து உத்தரவிட்டது.

அதன்படி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்பாக ரூ.50,000-க்கான தனிநபர் பத்திரம் வழங்க வேண்டும்.அவர் ஜாமீனில் இருக்கும் காலங்களில் முதல்வர் அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ செல்லக்கூடாது. அவர் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொள்ளலாம். துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி இல்லாமல் எந்த அலுவலக கோப்புகளிலும் அவர் கையெழுத்திடக்கூடாது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு பற்றி பேசவோ அல்லது தன் மீதான குற்றச்சாட்டு பற்றி விவாதிக்கவோ கூடாது. இந்த வழக்கில் தொடர்புடைய எந்த சாட்சிகளுடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

“அரவிந்த் கேஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவருவது நீதியை அடையாளப்படுத்துவதோடு, இண்டியா கூட்டணியையும் பலப்படுத்தியுள்ளது. தேர்தலில் இண்டியா கூட்டணி பெரும் வெற்றி பெறும் வேகத்தை இது கூட்டியுள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முக்கிய அம்சங்கள்: தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றுள்ளது. மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது. இந்தப் பொதுத் தேர்வில் 87.90% அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

பாடவாரியாக தமிழில் 8 பேர், ஆங்கிலத்தில் 415, கணிதத்தில் 20,691 பேர், அறிவியலில் 5,104, சமூக அறிவியலில் 4,428 பேர் நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை அரியலூர் 97.31% உடன் முதலிடத்தில் உள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து டாப் 5 பட்டியலில் இடம்பெறுள்ளன.

இதனிடையே புதுச்சேரி, காரைக்காலில் 10-ம் வகுப்பு தேர்வில் 89.14 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வட தமிழகத்தில் சீரழியும் கல்வி நிலை! - ராமதாஸ் வேதனை: “வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முதன்மைக் காரணம். இந்நிலையில், வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அப்பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

யானை வழித்தடங்கள் வரைவு அறிக்கைக்கு இபிஎஸ் எதிர்ப்பு: தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள இந்த நேரத்தில், யானை வழித்தடங்கள் வரைவு அறிக்கையை வெளியிட்டு, மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் மற்றும் வாழ்விடங்களை இழக்கும் நிலையை திமுக அரசு உருவாக்கியுள்ளது என எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வள்ளலார் சர்வதேச மையம் அனுமதி பெற்றே கட்டப்படும்: அரசு: அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. மேலும், சத்தியஞான சபைக்கு சொந்தமான 106 ஏக்கர் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: ஒப்பந்ததாரர், போர்மென் கைது: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் 10 பேர் உயிரிழந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில், சட்ட விரோதமாக ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த முத்துகிருஷ்ணன் மற்றும் போர்மேன் சுரேஷ் ஆகியோரை சிவகாசி கிழக்கு போலீஸார் வெள்ளிக்கிழமை காலை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் மே 14 வரை கனமழை வாய்ப்பு: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மே 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சனிக்கிழமையன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பானி, அதானியிடம் மன்றாடும் மோடி: ராகுல் தாக்கு: உத்தரப் பிரதேச மாநிலம் கன்னவுஜில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, "யாராவது பயம்கொள்ளும்போது அவர்களைக் காப்பாற்றக் கூடிய நபர்களின் பெயர்களை நினைத்துக் கொள்வார்கள். அதனால்தான் பிரதமர் மோடி இப்போது தனது இரண்டு நண்பர்களின் பெயர்களை எடுத்துள்ளார். ‘இண்டியா கூட்டணி என்னை கார்னர் செய்துவிட்டது. நான் தோற்கப் போகிறேன். என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அம்பானி, அதானியிடம் தற்போது மோடி மன்றாடி வருகிறார்” என்று பேசினார்.

மணி சங்கர் அய்யரின் பழைய வீடியோ குறித்த சர்ச்சை!: “பாகிஸ்தான் உடன் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் நாடு அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும்” என்று அணு ஆயுத இருப்புகளை மேற்கோள் காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் பேசிய பழைய வீடியோவை பாஜக வெளியிட்டு, புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மணி சங்கர அய்யரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "மணி சங்கர் அய்யர் அல்லது சாம் பிட்ரோடா யாராக இருந்தாலும் சரி, அது காங்கிரஸ் கட்சியின் சிந்தாந்தம் மற்றும் அரசியலையே வெளிப்படுத்துகிறது" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

அதேவேளையில், இந்த விவகாரத்தில் விலகி நிற்கும் காங்கிரஸ், அரசியல் ஆதாயத்துக்காக மணி சங்கர் அய்யரின் பழைய பேட்டி ஒன்றை வேண்டுமென்றே இப்போது பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே, அந்த வீடியோ பேட்டி சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள மணி சங்கர் அய்யர், “அது பல மாதங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வீடியோ. அந்த வீடியோவில் நான் அணிந்திருக்கும் ஸ்வெட்டரில் இருந்தே அதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். குளிர் காலத்தில் அது எடுத்தது. பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் தொய்வடைந்த காரணத்தால், அது இப்போது மீண்டும் பகிரப்பட்டுள்ளது. அவர்களது விளையாட்டுக்கு நான் பொறுப்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அட்சய திருதியையில் தங்கம் விலை உயர்வு: அட்சய திருதியை முன்னிட்டு சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்தது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,705 என்றும், பவுனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு பவுன் ரூ.53,640 என்ற அளவிலும் விற்பனையானது.

பிரதமர் மோடி குற்றச்சாட்டு: இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் பதில்: மக்களவைத் தேர்தல் இறுதி வாக்குப்பதிவு சதவீத முரண்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுதிய கடிதம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள தலைமைத் தேர்தல் ஆணையம், “விளக்கம் கேட்கும் போர்வையில் பாரபட்சமான முடிவை உருவாக்கும் முயற்சி இது” என்று சாடியுள்ளது.

பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பதிய உத்தரவு: பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பதிய டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜாமீனில் விடுதலையானார் கேஜ்ரிவால்: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுதலையான பின்னர், “சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்!” என்று தனது கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் முழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

1 min ago

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்