பாகிஸ்தான் பற்றிய கருத்து: மணி சங்கர் அய்யரின் பழைய வீடியோவுடன் பாஜக கிளப்பிய புதிய சர்ச்சை!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “பாகிஸ்தான் உடன் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் நாடு அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் பேசிய பழைய வீடியோ தற்போது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மணி சங்கர் அய்யரின் அந்த வைரல் பேட்டியில், “பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும். அந்த நாட்டிடம் அணுகுண்டு உள்ளது. அவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால், அவர்கள் இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டை பயன்படுத்தக்கூடும். அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால், நமது ராணுவ வலிமையை நாம் அதிகரிக்கிறோம். இது பதற்றத்தை மட்டுமே அதிகரிக்கும்.

பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் உள்ளன. நம்மிடமும் அணுகுண்டுகள் இருக்கின்றன. ஆனால், ஒரு பைத்தியக்கார மனிதன் இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டு வீச தீர்மானித்தால் நிலைமை என்னாவாகும்? அந்தப் பைத்தியக்காரான் லாகூரில் வெடிகுண்டு வீச முடிவு செய்தால், அதன் பாதிப்புகள் அமிர்தசரஸை அடைய 8 வினாடிகள் போதும்" என்று எச்சரித்துப் பேசியிருந்தார்.

பாஜக சாடல்: மணி சங்கர அய்யரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "மணி சங்கர் அய்யர் அல்லது சாம் பிட்ரோடா யாராக இருந்தாலும் சரி, அது காங்கிரஸ் கட்சியின் சிந்தாந்தம் மற்றும் அரசியலையே வெளிப்படுத்துகிறது.

பாகிஸ்தான் மற்றும் அதன் தீவிரவாதச் செயல்களுக்காக மன்னிப்புக் கோரும் கட்சியாக காங்கிரஸ் மாறியுள்ளது. மணி சங்கர் அய்யரின் கருத்துகளில் இருந்து காங்கிரஸ் விலகி நிற்கும் முயற்சியை இன்று மீண்டும் மேற்கொள்ளும். காங்கிரஸ் கட்சி அவநம்பிக்கை அடைந்துள்ளது. இந்த முறை அவர்கள் குறைவான இடங்களையே பெறுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களால் இந்த சமரச அரசியல் செய்வதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் மணி சங்கர் அய்யரின் பேட்டி வீடியோவை வெளியிட்டு பதிவிட்டுள்ளார். அதில் அவர், “இந்தத் தேர்தலில் ராகுலின் காங்கிரஸ் சித்தாந்தம் முழுவதுமாக வெளிப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆதரவு, மக்களைப் பிளவுபடுத்துவது, பொய்கள், அவதூறு பரப்புவது, ஏழைகளை தவறாக வழிநடத்த பொய்யான வாக்குறுதிகளை வழங்குவது” என நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? - மணி சங்கர் அய்யரின் கருத்துகளுக்கு உடனடியாக எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ் கட்சி, அவரின் பேச்சு கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்றும், அதிலிருந்து விலகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் ஆதாயத்துக்காக மணி சங்கர் அய்யரின் பழைய பேட்டி ஒன்றை வேண்டுமென்றே இப்போது பரப்புவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து காங்கிரஸின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடியின் அன்றாட அர்த்தமற்ற பேச்சுக்களில் இருந்து மக்களைத் திசை திருப்ப பாஜக இன்று மணி சங்கர் அய்யரின் பழைய பேட்டி ஒன்றை மீண்டும் கிளப்பியுள்ளது. மணி சங்கர் அய்யரின் அந்தக் கருத்துக்களில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி நிற்கிறது. அதை முற்றிலும் நிராகரிக்கிறது. மணி சங்கர் அய்யர் எப்போதும் கட்சிகாக பேசுவது இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

மணி சங்கர் அய்யர் விளக்கம்: இந்த வீடியோ பேட்டி சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள மணி சங்கர் அய்யர், “அது பல மாதங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வீடியோ. அந்த வீடியோவில் நான் அணிந்திருக்கும் ஸ்வெட்டரில் இருந்தே அதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். குளிர் காலத்தில் அது எடுத்தது. பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் தொய்வடைந்த காரணத்தால், அது இப்போது மீண்டும் பகிரப்பட்டுள்ளது. அவர்களது விளையாட்டுக்கு நான் பொறுப்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

42 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்