மே 10-ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதியான வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
தேர்வர்கள் இந்த இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் எஸ்எம்எஸ் வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
» லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்வதிலும் ஊழல்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
» உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த சம்பவம்: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு
‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ பிரச்சினை என்ன?: சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த காரணத்தால் அந்த நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடு என 80-க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன.
டாடா குழுமம் கடந்த 2021 முதல் நிர்வகித்து வரும் ஏர் இந்தியாவின் ஒரு பிரிவான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தரப்பில், வேலை நிமித்தமாக கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறை மாற்றங்கள்தான் இந்த விடுப்புப் போராட்டத்துக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது.
குறிப்பாக, நிறுவனமானது ஊழியர்களை நடத்தும் முறையில் சமத்துவம் இல்லை என்ற குற்றச்சாட்டை ஊழியர்கள் முன்வைத்துள்ளனர். இழப்பீடு சார்ந்து முக்கிய தொகுப்பில் பெரிய மாற்றங்கள் செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அதற்குரிய பணிக்கான பொறுப்பில் தாங்கள் பணி அமர்த்தப்படவில்லை என்றும் அவர் கூறுகின்றனர்.
ஏஐஎஸ் உடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸை இணைக்கும் முடிவில் டாடா குழுமம் இருப்பதாகவும் காரணங்கள் அடுக்கப்படுகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை பாதிப்பை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தடுப்பூசியை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனெகா!: உலக சந்தையில் இருந்து தங்களது கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது பிரிட்டன் நாட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம். வர்த்தக ரீதியான காரணங்களால் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனா பெருந்தொற்று நெருக்கடியின்போது அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கோவிட்-19 பாதிப்புக்கு தடுப்பூசியை உருவாக்கின. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து கரோனாவுக்கான தடுப்பூசியாக ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலக நாடுகளை சேர்ந்த பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இந்தச் சூழலில் அஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக சொல்லி பிரிட்டன் நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்குக தொடரப்பட்டது. இது அந்த நாட்டில் தற்போது விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கஞ்சா விற்பனை வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி: கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகளில் நீதிமன்றத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என சரமாரியாக கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இவிஎம்-கள் அறைகளில் கூடுதல் கேமராக்கள்: தேர்தல் ஆணையம்: தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர்: கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த அவர் மதுரை அழைத்துச் செல்லப்பட்டார். தேனியில் இவரைப் பிடித்தபோது கஞ்சா வைத்து இருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப் பதிந்தனர். அந்த வழக்கில் சவுக்கு சங்கர் செவ்வாய்க்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் விசாரணை தீவிரம்: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரது இல்லம் அமைந்திருக்கும் கரைசுத்துப்புதூர் பகுதியில் 10 கி.மீ. தூரத்துக்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அவ்வழியாக வந்து சென்ற வாகனங்கள் மற்றும் செல்போன் அழைப்புகளின் விவரங்களை சேகரித்தும் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
“அம்பானி, அதானி குறித்து திடீர் மவுனம் ஏன்?” - மோடி: “பல ஆண்டுகளாக காங்கிரஸ் இளவரசரான ராகுல் காந்தி, 5 தொழிலதிபர்களைப் பற்றி பேசினார். பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி மட்டும் பேசத் தொடங்கினார். இப்போது அவர்கள் பற்றியும் பேசாமல் திடீர் மவுனம் காத்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ராகுல் காந்தி மற்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அம்பானி மற்றும் அதானி பற்றி அவதூறு பேசுவதை நிறுத்தி விட்டனர். ஏன்? அம்பானி, அதானியிடம் இருந்து நீங்கள் எவ்வளவு பணம் பெற்றீர்கள்?” என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
“பொய்களைப் பரப்புவதில் பாஜகவும் தீவிரம்” - பிரியங்கா: “ராகுல் காந்திக்கு எதிராக ஒட்டுமொத்த பாஜகவும் பொய்களைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஏப்ரல் 2024 உலகின் அதிக வெப்பமான மாதம்: உலகின் பெரும்பாலான பகுதிகளில் எல் நினோ தாக்கத்தால் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், உலகில் அதிக வெப்பம் பதிவான மாதமாக 2024 ஏப்ரல் மாதம் இருந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஜ்ரிவாலின் ஜாமீன் குறித்து மே 10-ல் உத்தரவிட வாய்ப்பு: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து வரும் வெள்ளிக்கிழமை (மே 10) உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்தை உடைக்க பாஜக திட்டம்”:“ஒடிசாவில் எதிர்க்கட்சியான பாஜக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக போட்டியிடவில்லை. பிஜு ஜனதா தளத்தை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது” என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்: கர்நாடக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பெண்ணைக் கடத்திய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடா மகனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவுமான ஹெச்.டி.ரேவண்ணாவை மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago