புதுடெல்லி: நாடு முழுவதும் 93 தொகுதிகளில் நடந்த 3-ம் கட்ட மக்களவை தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகின. குஜராத்தின் அகமதாபாத்தில் பிரதமர் மோடி வாக்களித்தார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம்தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 102 தொகுதிகள், ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, 3-ம் கட்டமாக 10 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 93 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதன்படி அசாமில் 4, பிஹாரில் 5, சத்தீஸ்கரில் 7, டாமன்-டையூவில் 2, கோவாவில் 2, குஜராத்தில் 25, கர்நாடகாவில் 14, மத்திய பிரதேசத்தில் 9, மகாராஷ்டிராவில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.
» “ஆகாஷ் ஆனந்த் இனி தனது அரசியல் வாரிசு கிடையாது”: மாயாவதி அறிவிப்பு
» ஹரியாணாவில் பாஜகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற 3 சுயேச்சை எம்எல்ஏக்கள்
பின்னர் அவர் கூறியபோது, ‘‘தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். முன்னதாக, வழிநெடுகிலும் திரளான மக்கள் திரண்டு நின்று பிரதமரை வரவேற்றனர்.
உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, மத்திய உள்துறை அமைச்சரும் காந்தி நகர் தொகுதி வேட்பாளருமான அமித் ஷா, தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது மனைவி பிரீத்தி ஆகியோரும் அகமதாபாத்தில் வாக்களித்தனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேலின் மகன் அனுஜ் படேல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, அவரது மனைவி ரிவாபா எம்எல்ஏ ஆகியோர் ஜாம்நகர் பகுதியில் வாக்களித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவரது மனைவி ராதாபாய் ஆகியோர் கர்நாடகாவின் கல்புர்கியில் வாக்களித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, ‘‘கடந்த மக்களவைதேர்தலில் மக்கள் செய்த தவறுக்காக இப்போது வருந்துகின்றனர். இந்த முறை காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்’’ என்றார்.
உத்தர பிரதேச மாநிலம் எட்டாவா பகுதியில் உள்ள சைஃபை கிராமத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் ஆகியோர் வாக்களித்தனர்.
வன்முறை, மோதல்: உத்தர பிரதேசத்தின் சம்பல்தொகுதிக்கு உட்பட்ட குண்டர்கி, பிலாரி, சந்தவ்சி உள்ளிட்ட பகுதிகளில் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர்.
மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற 4 தொகுதிகளின் பல்வேறு இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலம் ஜாங்கிபூர் மக்களவை தொகுதியில் பாஜகசார்பில் தனஞ்செய் கோஷ் போட்டியிடுகிறார். அவர் ஜாங்கிபூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றபோது, அவருக்கும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பு படை வீரர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
பிஹாரின் சுபால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர் மாரடைப்பால் உயிரிழந்தார். பிஹாரின்அரரியா பகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். சத்தீஸ்கரின் ஜஸ்பூர் மாவட்டம் சர்குஜா பகுதியில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த முதியவர், வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தார்.
நாடு முழுவதும் 93 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 64.08 சதவீத வாக்குகள் பதிவாகின. அசாமில் அதிகபட்சமாக 75 சதவீத வாக்குகளும், மகாராஷ்டிராவில் குறைந்தபட்சமாக 53 சதவீத வாக்குகளும் பதிவாகின.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago