ம.ஜ.த. எம்.பி. பிரஜ்வல் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற கர்நாடக முதல்வர் மறுப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் ம.ஜ.த. எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

ஹாசன் தொகுதி எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் மீண்டும் களமிறங்கியுள்ளார். அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் 3 பெண்கள் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல், அவரது தந்தை ரேவண்ணா (66) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரஜ்வல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிலையில், அவரது தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும் ம.ஜ.த. தலைவருமான குமாரசாமி கூறும்போது, ‘‘ஆபாச வீடியோக்கள் அடங்கிய 25 ஆயிரம் பென் டிரைவ்களை காங்கிரஸார் கர்நாடகா முழுவதும் விநியோகித்துள்ளனர். வாட்ஸ்-அப் குழுக்கள் உருவாக்கி அதனை பரப்பியுள்ளனர். துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமானவர்கள் இதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்'' என கோரினார்.

இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், ‘‘சிறப்பு புலனாய்வு குழுவினர் சுதந்திரமாக விசாரிக்கின்றனர். எனவே இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படாது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE