கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் ‘தயக்கம்’ காட்டுவது ஏன்?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், அவர் தனது அலுவல் பணிகளைச் செய்ய முடியாது. அது அடுக்கடுக்கான விளைவுகளை ஏற்படுத்தலாம்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இடைக்கால ஜாமீன் குறித்த விசாரணையை மே 9-ம் அல்லது அடுத்த வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தற்போது திஹார் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால், தான் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ஏப்ரல் 9-ம் தேதி ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அடங்கி அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (மே 3) நடந்த வழக்கு விசாரணையின்போது, இந்த வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின்போது உச்ச நீதிமன்ற அமர்வு, கேஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியிடம், “கேஜ்ரிவால் இடைக்கால ஜமீனில் விடுவிக்கப்பட்டால் அவர் முதல்வர் அலுவலகம் செல்வாரா, கோப்புகளில் கையெழுத்திடுவாரா, மற்றவர்களுக்கு உத்தரவுகள் வழங்குவாரா?" என்று கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த அபிஷேக் மனு சிங்வி, “அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கைகளை கையாளமாட்டார். அவர் தற்போதும் மாநிலத்தின் முதல்வர்" என்று தெரிவித்தார்.

அதற்கு நீதிமன்ற அமர்வு, “அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுவிக்க நாங்கள் முடிவு செய்தால் நீங்கள் அலுவல் பணிகளைச் செய்ய விரும்பவில்லை என்பதை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அது அடுக்கடுக்கான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தனர்.

மேலும், “நாங்கள் அரசாங்க அலுவல்களில் தலையிடுவதை விரும்பவில்லை. முதல்வராக நீடிக்க வேண்டும் என்பதே உங்களின் விருப்பம். இன்று இது சட்டப்பூர்வ பிரச்சினை இல்லை. உரிமைப் பிரச்சினை. தேர்தல் காரணமாகவே நாங்கள் இடைக்கால ஜாமீனை விசாரணை செய்கிறோம். மற்றபடி இதனை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டோம்” என்று கூறி, மதியம் 2.30 மணிக்கு இதனை விசாரிப்பதாக தெரிவித்தனர்.

மதியம் விசாரணையின்போது, நீதிமன்ற அமர்வு, “கேஜ்ரிவாலின் வழக்கை எப்போது விசாரிக்க முடியும் என்று பார்க்கலாம். நாங்கள் ஒரு முடிவுக்கு வந்த பின்பு உங்களிடம் அதுகுறித்து தெரிவிப்போம். தற்காலிகமாக இந்த விவகாரம் நாளை மறுநாள் (மே 9) அல்லது அடுத்த வாரத்தில் பட்டியிலிடப்படலாம்" என்று தெரிவித்தது.

முன்னதாக, நடந்த விசாரணையின்பாேது அமலாக்கத் துறையிடம் உச்ச நீதிமன்ற அமர்வு, “கேஜ்ரிவால் டெல்லியின் முதல்வராக இருப்பதாலும், அவர் மக்களைத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யவேண்டும் என்பதாலும் அவரின் இடைக்கால ஜாமீனை நாங்கள் விசாரிப்போம். இது ஒரு அசாதாரணமான சூழ்நிலை. அவரும் (கேஜ்ரிவால்) வழக்கமான குற்றவாளி போன்றவர் இல்லை. தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருகிறது. இது ஒவ்வொரு நான்கு அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பயிர் அறுவடை செய்வது போல இல்லை. அவரை இடைக்கால ஜாமீனில் வெளியே அனுப்ப வேண்டுமா என்று நாம் முன்னுரிமையின் அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும்" என்று தெரிவித்தது.

நீதிமன்றத்தின் பரிந்துரையை நிராகரித்த அமலாக்கத் துறை, “இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடலாம். ஒரு சாதாரணமாக குடிமகனுடன் ஒப்பிடுகையில் அரசியல்வாதிக்கு எந்த சிறப்பு உரிமையும் கிடையாது. வழக்கு விசாரணையை மேற்கொள்ளும் அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியது.

இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறை எழுப்பியிருக்கும் விவகாரத்துக்கு, கேஜ்ரிவால் சார்பில் ஆஜரான அபிஷேக் சிங் மன்வி பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், "சாமானிய மனிதனுடன் ஒப்பிடும்போது ஓர் அரசியல்வாதிக்கு சிறப்பு சலுகை அளிக்க முடியுமா? சுமார் 5,000 பேர் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் எல்லாம் பிரச்சாரத்துக்கு செல்லவேண்டும் என்றால் என்ன செய்வது? ஆறு மாதங்களில் 9 சம்மன் அனுப்பப்பட்டது. நேரத்தை தேர்வு செய்ததற்காக அமலாக்கத் துறையை குறை கூற முடியாது. மேலும், அவர்கள் இன்னும் சாட்சிகளுக்குள் செல்லவில்லை. இந்தக் காலக்கட்டத்தில் எப்படி இடைக்கால ஜாமீன் வழங்க முடியும்?" என்று தெரிவித்தது.

விசாரணையின்போது, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்கும், கேள்வி கேட்பதற்கும் தாமதம் செய்வது ஏன் என்று அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் எஸ்.வி.ராஜுவிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த ராஜு, “நாங்கள் இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்கியபோது, எங்களின் விசாரணை நேரடியாக அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிரானதாக இல்லை. வழக்கு விசாரணையின்போது இந்த விவகாரத்தில் அவரின் பங்கு குறித்து தெரியவந்தது. அதனால்தான் ஆரம்பத்தில் அவரைப் பற்றி ஒரு கேள்வியும் கேட்கப்படவில்லை. விசாரணை அவர் மீது கவனம் செலுத்தவில்லை" என்றார்.

இதற்கு பதில் அளித்த நீதிமன்ற அமர்வு, "இது ஒரு அசாதாரண வழக்கு, நீங்கள் ஏன் இவ்வளவு காலம் எடுத்தீர்கள், ஏன் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அவரைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை என்று நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். நீங்கள் ஏன் தாமதப்படுத்துகிறீர்கள் என்பதே ஒரே பிரச்சினை?" என்று கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்