செய்தித் தெறிப்புகள் @ மே 3: ரேபரேலியில் ராகுல் முதல் தி.மலை - சென்னை ரயில் சேவை வரை

By செய்திப்பிரிவு

ரேபரேலியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்: உத்தரப் பிரதேசத்தில் காந்தி குடும்பத்தின் ஆஸ்தான தொகுதிகளாக இருப்பது அமேதி மற்றும் ரேபரேலி. இந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்ற நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின்னர் ரேபரேலி வேட்பாளராக ராகுல் காந்தியும், அமேதி வேட்பாளராக கே.எல்.சர்மாவும் அறிவிக்கப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கலின்போது அவருடன் தாய் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உடனிருந்தனர்.

“அச்சப்பட்டு ஓட வேண்டாம்”- ராகுல் மீது மோடி தாக்கு: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ரேபரேலி வேட்பாளர் ஆன நிலையில், “வயநாட்டில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் இளவரசர் போட்டியிட வேறு தொகுதியைத் தேடிக் கொண்டிருக்கிறார் என நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். இப்போது அமேதியிலிருந்து ஓடிப்போய் ரேபரேலியை அவர் தேர்வு செய்துள்ளார். இவர்கள்தான் ஊர் ஊராகச் சென்று அஞ்சாதீர்கள் எனப் பிரச்சாரம் செய்பவர்கள். நான் அவர்களுக்கு அதையே திருப்பிச் சொல்கிறேன். அச்சப்பட்டு ஓடாதீர்கள்” என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

இதனிடையே “ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதில் நிறைய பேர் நிறைய கருத்துகளைச் சொல்லலாம். ஆனால், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். ராகுல் காந்தி தேர்ந்த அரசியல்வாதி. தேர்ந்த செஸ் வீரரும் கூட. கட்சி இந்த முடிவை நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் ஒரு பெரிய அரசியல் உத்தியை கருத்தில் கொண்டு வகுத்துள்ளது. இந்த முடிவு பாஜகவை, அதன் ஆதரவாளர்களை கலங்கடித்துள்ளது” காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இழிவான முறையில் பிரதமர் மோடி பிரச்சாரம்: தமிழக காங்.: “உளவுத் துறை மூலம் கிடைத்த தகவலின்படி பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற ரகசிய அறிக்கை காரணமாக மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து சிறுபான்மையினருக்கு எதிராக துவேஷ பிரச்சாரத்தை மிக மிக கீழ்த்தரமாக இழிவான முறையில் பிரதமர் மோடி செய்து வருகிறார். இத்தகைய மலிவான, பொறுப்பற்ற அரசியல்வாதியை 10 ஆண்டு காலம் பிரதமராக பெற்றதற்கு ஒவ்வொரு இந்தியரும் தலை குனிய வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் தொடரும் வெப்ப அலையும், கனமழை வாய்ப்பும்: “மே 6-ஆம் தேதி வரை வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்” என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, “எல்-நினோ காலகட்டத்தில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு இருந்ததால் வெப்பம் அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 - 40 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக் கூடும். கத்திரி வெயில் காலத்தில் முதல் 7 நாட்களுக்கு வெப்பம் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 5 நாட்கள் தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

“பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் கவலைக்கிடம்” - முதல்வர்: “உலகப் பத்திரிகை சுதந்திர நாளில், ஒரு கொடும் யதார்த்தத்தை எதிர்கொள்வோம். பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நைந்து போயுள்ளது. பல பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல்கள் போன்றவை பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம் ஆகியுள்ளதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், முறையான இடஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய பட்டியலை நான்கு வாரத்துக்குள் வெளியிட உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹெச்.டி.ரேவண்ணா மீது 2-வது வழக்குப் பதிவு: பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், பிரஜ்வலின் தந்தையுமான எச்.டி.ரேவண்ணா மீது இரண்டாவது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைசூரு கேஆர் நகர் காவல் நிலையத்தில் இந்த இரண்டாவது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வால் ரேவண்ணாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மலை - சென்னை ரயில் சேவை: விழுப்புரம் - காட்பாடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்கப்பட்டன. இப்பணியை தொடங்குவதற்கு முன்பாக, விழுப்புரம் வழியாக திருவண்ணாமலை - தாம்பரம் இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு, சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்படும் மெமு ரயில் சேவையை திருவண்ணாமலை வரை நீட்டித்து தென்னக ரயில்வே அறிவித்தது. பல்வேறு குழப்பங்களுக்கு இடையே திட்டமிட்டபடி, சென்னை கடற்கரையில் இருந்து வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு புறப்பட்ட மெமு ரயில், திருவண்ணாமலை ரயில் நிலையத்தை நள்ளிரவு 12.05 மணிக்கு வந்தடைந்தது.

இதையடுத்து, திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மெமு ரயில் புறப்பட்டு சென்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட ரயில் எஞ்ஜின் மீது மலர்களை தூவி ஆன்மிக அன்பர்கள், பொது நல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிடோர் வழியனுப்பி வைத்தனர். ரயில் எஞ்ஜின் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

ஐ.நா.வில் பாகிஸ்தான் பேச்சுக்கு இந்திய கண்டனம்: பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், ஐ.நா பொதுச்சபையில் ‘அமைதி கலாச்சாரம்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர், குடியுரிமை திருத்தச் சட்டம், அயோத்தி ராமர் கோயில் ஆகியவற்றை உள்ளடக்கி பேசியதற்கு இந்தியா கண்டித்துள்ளது.

எப்போதுமே சந்தேகத்துக்குரிய போக்கினையே கொண்ட நாடாக பாகிஸ்தான் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், அந்நாட்டின் ஐ.நா.வுக்கான நிரந்தர தூதரின் தீங்கிழைக்கும் அநீதியான கருத்துக்களை இந்தியா சாடியுள்ளது.

பெங்களூருவை குளிர்வித்த மழை!: 5 மாதங்களுக்குப் பிறகு பெங்களூருவில் வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. கடைசியாக நவம்பர் 23 அன்று பெங்களூருவில் மழை பதிவானது. அதன் பின்னர் அந்நகரம் வறண்ட வானிலையைதான் கண்டு வந்தது. தற்போது அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். பெங்களூருவில் அடுத்த நான்கு நாட்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திரிணமூல் காங். மீது பிரதமர் மோடி சாடல்: “மேற்கு வங்கத்தில் இந்துக்களை இரண்டாம் நிலை குடிமக்களாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி மாற்றியுள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.

தீவட்டிப்பட்டி தொடரும் பதற்றத்தால் கடைகள் அடைப்பு: சேலம் அருகே கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவத்தில் 31 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பதற்றமான சூழலல் நிலவி வருவதால் அப்பகுதியில் தொடர்ந்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனை பரிசீலிக்கிறது உச்ச நீதிமன்றம்: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று அமலாக்கத் துறையிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்