ஆபாச வீடியோ சர்ச்சை: எச்.டி.ரேவண்ணா மீது 2-வது எஃப்ஐஆர் பதிவு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் ஜனதா தளம் (எஸ்) மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், பிரஜ்வலின் தந்தையுமான எச்.டி.ரேவண்ணா மீது இரண்டாவது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மைசூரு கேஆர் நகர் காவல் நிலையத்தில் ரேவண்ணா மீது இந்த இரண்டாவது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வால் ரேவண்ணாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது இந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 376(2)(N), 506, 354A(1), 354(B), 354(c) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஹெச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் முன்னர் இந்த எஃப்ஐஆர் பதிவு செய்யடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை பின்னணி: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் எம்.பி.,யுமான‌ பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் களமிறங்கினார். கடந்த 26-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியாகின.

25 வயதான பெண் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் தொந்தரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது வீட்டில் வேலை செய்த 48 வயதான பெண்ணும் புகார் அளித்ததால் பிரஜ்வல் மீதும், அவரது தந்தை ரேவண்ணா மீதும் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ரேவண்ணா மீது தற்போது இரண்டாவது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆபாச வீடியோக்கள் வெளியான அன்றே அவர் ஜெர்மனி சென்றதாக சொல்லப்படுகிறது. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. எனினும், அவர் இன்னும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா மீது 2வது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE