“இந்துக்களை இரண்டாம் நிலை குடிமக்களாக மாற்றி இருக்கிறது திரிணமூல் காங்.” - பிரதமர் மோடி சாடல்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: “மேற்கு வங்கத்தில் இந்துக்களை இரண்டாம் நிலை குடிமக்களாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி மாற்றியுள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை ஒட்டி மேற்கு வங்கத்தின் பர்தமான் - துர்காபூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் பிரதமர் மோடி பேசியது: “திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் மேடைப் பேச்சின்போது இந்துக்களை கடுமையாக சாடியுள்ளார். ‘இந்துக்களை 2 மணி நேரத்தில் பகீரதி ஆற்றில் தூக்கி வீசுவோம்’ எனக் கூறியுள்ளார். இது என்ன மாதிரியான பேச்சு? எதை முன்னெடுக்கும் அரசியல்?

மேற்கு வங்கத்தில் இந்துக்களாகிய நாம் ஏன் இரண்டாம் நிலை குடிமக்களாக இருக்கிறோம். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அயோத்தி ராமர் கோயில் கட்டியதில் விருப்பம் இல்லை. மேற்கு வங்கத்தில் ராம நவமி ஊர்வலம் நடந்தால் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. ஏன் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தை அவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடிவதில்லை.

சந்தேஷ்காலியில் தலித் சகோதரிகள் கொடுமைகளுக்கு உள்ளாகினர். திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற முயற்சித்தது. ஏனென்றால், அவர் பெயர் ஷாஜஹான் ஷேக். திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கிக்காக சமரச அரசியல் செய்கிறது. வாக்கு வங்கி என்பது மக்களைவிட, மனிதாபிமானத்தைவிட பெரியதா என்ன?” என்று பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக நேற்று பாஜக தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாள்வியா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பரத்பூர் எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் பேச்சு அடங்கிய வீடியோவைப் பகிர்ந்து ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார்.

இந்துக்களை 2 மணி நேரத்தில் பகீரதி ஆற்றில் வீசுவோம் என்று பொருள்பட கபீர் பேசியிருந்ததை சுட்டிக்காட்டிய மாள்வியா, “முர்ஷிதாபாத்தில் 28 சதவீதம் பேர் மட்டுமே இந்துக்கள். ஹுமாயூன் பேச்சு அங்கே அவர்கள் எதிர்கொள்ளும் நிலையின் சாட்சி. இன்னும் இந்துக்களுக்கு என்னவெல்லாம் காத்திருக்கிறதோ. முஸ்லிம் சமரச அரசியல் மேற்கு வங்கத்தில் புதிய தோற்றத்தை எடுத்துள்ளது.

மம்தா பானர்ஜிக்குதான் நன்றி சொல்ல வேண்டும். கபீரை கட்சியைவிட்டு நீக்க மம்தா துணிவாரா? இந்துக்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கும் அறிவுஜீவிகள் இப்போது ஏதாவது கருத்து சொல்வார்களா?” என்று வினவியிருந்தார். இதனை ஒட்டியே பிரதமர் தனது கருத்தை இன்று பதிவு செய்துள்ளார்.

மோடியின் வாக்குறுதி... - தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,“மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையம் மூலம் தேர்வாகி சர்ச்சையில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் நேர்மையான சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு உதவ மேற்கு வங்க பாஜகவை தனியாக ஒரு குழு அமைக்கச் சொல்லியிருக்கிறேன். அத்தகைய நேர்மையானவர்களை பாஜக அடையாளம் கண்டு அவர்களது சட்டப் போராட்டத்துக்கு உறுதுணையாக நிற்கும். இதுதான் மோடியின் வாக்குறுதி” என்றார்.

ராகுலை சாடிய மோடி: அதேபோல் காங்கிரஸ் கட்சியின் ரேபரேலி வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டுள்ளதை விமர்சித்த பிரதமர் மோடி, “வயநாட்டில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் இளவரசர் போட்டியிட வேறு தொகுதியைத் தேடிக் கொண்டிருக்கிறார் என நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். இப்போது அமேதியிலிருந்து ஓடிப்போய் ரேபரேலியை அவர் தேர்வு செய்துள்ளார். இவர்கள்தான் ஊர் ஊராகச் சென்று அஞ்சாதீர்கள் எனப் பிரச்சாரம் செய்பவர்கள். நான் அவர்களுக்கு அதையே திருப்பிச் சொல்கிறேன். அச்சப்பட்டு ஓடாதீர்கள்” என்று விமர்சித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE