கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தீவிரவாத தாக்குதல் கணிசமாக குறைந்துள்ளது: ராஜ்நாத் சிங்

By செய்திப்பிரிவு

பாட்னா: கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் தீவிரவாத தாக்குதல் சம்பவம் கணிசமாக குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பிஹாரின் சரன் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ராஜீவ் பிரதாப் ரூடி போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து சரன் நகரில் பாஜக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஊழலை ஒழிக்க முடியவில்லை. இதை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். மக்கள் நலத்திட்டத்துக்கு ஒரு ரூபாயை ஒதுக்கினால் 15 பைசா மட்டுமே மக்களை சென்றடைகிறது என்று அவரே கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக் காலத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. ஜன்தன் வங்கிக் கணக்கு, ஆதார், செல்போன் எண் இணைப்பு மூலம் பல்வேறு மானிய உதவிகள் மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

பாஜக ஆட்சிக் காலத்தில் எந்தவொரு அமைச்சர் மீதும் ஊழல் புகார் எழவில்லை. மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு இருக்கிறது.

லாலு பிரசாத் குடும்பத்தின் பெயரை சொன்னாலே எல்லோருக்கும் சிரிப்பு வருகிறது. அந்த அளவுக்கு அந்த குடும்பத்தின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் நாடு முழுவதும் பிரபலமாகி இருக்கிறது. லாலு, அவரது மனைவி ரப்ரி ஆட்சி நடத்தியபோது பிஹார் பின்னோக்கி சென்றது. முதல்வர் நிதிஷ் குமார் ஆட்சியில் பிஹார் முன்னோக்கி செல்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி மீது பிஹார் மட்டுமன்றி நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். தற்போதைய மக்களவைத் தேர்தலில் மோடி அலையால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்.

இதற்கு முன்னோட்டமாக குஜராத்தின் சூரத், மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி பம் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார்.

கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பாரதம் வலுவான நாடாக உருவெடுத்து உள்ளது. இதை அண்டை நாடுகள் நன்றாக உணரத் தொடங்கிவிட்டன. உக்ரைன் போர்க்களத்தில் இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்தபோது பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா, உக்ரைன் அதிபர்களுடன் நேரடியாக பேசினார். அவரது வேண்டுகோளுக்கு மதிப்பு அளித்து இரு நாடுகளும் சில மணி நேரம் போரை நிறுத்தின.

இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தீவிரவாத தாக்குதல்கள் கணிசமாக குறைந்துவிட்டன.

பாஜக வேட்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி, பயிற்சி பெற்ற விமானி ஆவார். அவர் வானத்தில் அனைத்து வேட்பாளர்களையும் பந்தாடி பறக்கவிடுவார். அவரது வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டுவிட்டது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE