வெடிகுண்டு மிரட்டலையடுத்து டெல்லி பள்ளிகளில் வருகை பதிவு குறைவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் சுமார் 200 பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டும், மாணவர்களின் வருகைப்பதிவு வழக்கத்தை விட மிக குறைவாக இருந்தது.

நாட்டில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் குண்டு வைத்திருப்பதாக 2 நாட்களுக்கு முன்பு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள பள்ளிகளில் குண்டு வைத்திருப்பதாக சுமார் 200 பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் பீதியடைந்தனர். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு அங்கு சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த மிரட்டல் புரளி எனவும், ரஷ்யாவில் இருந்து இந்த இ-மெயில் அனுப்பப்பட்டது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் டெல்லி போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பள்ளிகள் நேற்று வழக்கம் போல் திறக்கப்பட்டன. ஆனால் மாணவர்களின் வருகைப்பதிவு வழக்கத்தை விட குறைவாக இருந்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால், மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் திட்டங்கள் குறித்து பள்ளி முதல்வர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த பேரிடர் குழுவினர் பாதுகாப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என மவுன்ட் அபு பள்ளி முதல்வர் ஜோதி அரோரா கடிதம் எழுதியுள்ளார்.

பள்ளிக்கு வர பயப்படும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆலோசனை வழங்கவும், இல்லையென்றால் பள்ளி ஆலோசகர்களை தொடர்பு கொள்ளவும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இ-மெயில் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜோதி அரோரா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE