ஒடிசாவில் வேட்பாளராக களமிறங்கினார் ஹேமந்த் சோரனின் சகோதரி!

By செய்திப்பிரிவு

ராஞ்சி: ஒடிசா மக்களவைத் தேர்தலில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அஞ்சனிக்கு எதிராக பிஜு ஜனதா தளத்தின் சார்பில் சுதம் மார்ண்டி, பாஜகவின் நபா சரண் மாஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட அஞ்சனி 11.78 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததார். 2019ல் மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை.

ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.

நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, அதனைத் தொடர்ந்து அன்றைய இரவு 8.30 மணி அளவில் அவரை கைது செய்தது. இதன் தொடர்ச்சியாக, ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ஹேமந்த் சோரனின் தீவிர விசுவாசி ஆவார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE