பாதுகாப்பு பணிக்கு 155 கம்பெனி துணை ராணுவம்: தெலங்கானா மாநில தேர்தல் அதிகாரி விகாஸ்ராஜ் தகவல்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானா மாநில தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு 155 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபடவுள்ளனர் என்று மாநில தேர்தல் அதிகாரி விகாஸ்ராஜ் தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலத்தில் வரும் 13-ம் தேதி ஒரே கட்டமாக 17 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக நேற்று ஹைதராபாத்தில் மாநில தேர்தல் அதிகாரி விகாஸ்ராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மொத்தமுள்ள 17 மக்களவைத் தொகுதிகளில் 525 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக செகந்திராபாத் தொகுதியில் 45 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக ஆதிலாபாத் தொகுதியில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் 285 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள் மிக அதிகம் உள்ள 7 தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 9 தொகுதிகளில் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் அமைக்கப்படும்.

10-ம் தேதி முதல் ‘ஹோம் ஓட்டிங்’ (வீடுகளுக்கே சென்று முதியோரிடம் வாக்குப்பதிவைச் செய்தல்) தொடங்கப்பட உள்ளது. ஹைதராபாத் மாநகரில் மட்டும் மொத்தம் 3,986 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் 35,809 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 155 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபட உள்ளனர்.

2.94 லட்சம் பணியாளர்கள்: 2.94 லட்சம் தேர்தல் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தேர்தல் குறித்த புகார்களுக்குபொதுமக்கள் 1950 எனும் இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். அப்படி இதுவரை 1,227 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாநில தேர்தல் அதிகாரி விகாஸ்ராஜ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE