“காங்கிரஸ் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறது” - அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் தனது தேர்தல் பிரச்சாரத்துக்காக பொய்களையும், வதந்திகளையும் பரப்பி வருகிறது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ‘டீப்ஃபேக் மற்றும் மார்பிங்’ வீடியோவை பரப்பியதாக காங்கிரஸ் மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. மேலும் அக்கட்சி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது.

ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளது அல்லது இடஒதுக்கீடு பாஜகவால் பறிக்கப்படும் என காங்கிரஸார் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் தனது தேர்தல் பிரசாரத்தில் பொய்களையும், வதந்திகளையும் பரப்பி வருகிறது. அதாவது தனது பிரச்சாரத்துக்காக டீப்ஃபேக் உட்பட அனைத்து வகையான தந்திரங்களையும் பயன்படுத்துகிறது.

பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசியினரின் உரிமைகளை காங்கிரஸ் பறித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் எமர்ஜென்சியை அமல்படுத்தி ஜனநாயகம் முடிவுக்கு வந்தது. கர்நாடகா, தெலங்கானா போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இடஒதுக்கீடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரை காங்கிரஸ் அவமானப்படுத்தியது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை அடைவதில் உத்தரப்பிரதேசம் முக்கிய பங்கு வகிக்கும். மோடி அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE