வெறுப்பின் உச்சத்தைக் காட்டுகின்றனர்: கேஜ்ரிவாலை சந்தித்த பின்னர் பஞ்சாப் முதல்வர் கருத்து

By செய்திப்பிரிவு

வெறுப்பின் உச்சத்தைக் காட்டுகின்றனர் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சிறையில் சந்தித்த பின்னர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம்தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் திஹார்சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று 2-வது முறையாக திஹார் சிறையில் அர்விந்த் கேஜ்ரிவாலை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பகவந்த் மான் கூறியதாவது: சிறையில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொள்கிறார். பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை உற்பத்தி குறித்து என்னிடம் கேட்டார். அதேபோல் மின்சார வினியோகம் குறித்தும் கேட்டறிந்தார். பஞ்சாப் மாநிலத்தின் அரசு பள்ளியில் படித்த 158 மாணவர்கள் ஜேஇஇ முதன்மை தேர்தலில் தேர்ச்சி பெற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்.

நான் சமீபத்தில் குஜராத், அசாம் மாநிலங்களுக்குச் சென்றிருந்தேன். அதுகுறித்தும் கேஜ்ரிவால் கேட்டறிந்தார். ஆம் ஆத்மிக்கு குஜராத்தில் மனதை கவரும் வகையில் ஆதரவு இருப்பதாக தெரிவித்தேன். அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பதற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற தகவலை என்னிடம் தெரிவித்தார்.

திஹார் சிறையில் எங்கள் சந்திப்பின்போது எங்களுக்கு இடையே இரும்புக் கம்பி வேலி இருந்தது. இதைவெறுப்பின் உச்சம் என்று சொல்லலாம். வெறுப்பைக் காட்டுகின்றனர்.

தன்னைப் பற்றிக் கவலைப்படாத அவர் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார். ஜனநாயகத்தைக் காப்பாற்ற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE