ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியதால் மஜதவில் இருந்து நீக்கம்: தேவகவுடா பேரன் பிரஜ்வல் வெளிநாட்டுக்கு தப்பினார்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டுக்கு தப்பிய அவர் உடனடியாக நாடு திரும்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வு குழு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் (33). கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யான அவர், தற்போதைய மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் அதே தொகுதியில் மீண்டும் களமிறங்கினார்.

கடந்த 26-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகின. ஹாசன் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த வீடியோ காட்சிகள் அடங்கிய பென்-டிரைவ்,வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரஜ்வல் பாலியல் தொந்தரவு செய்ததாக 25 வயது பெண் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில், ஹாசன் போலீஸார் அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே, தேவகவுடாவின் மூத்த மகனும், பிரஜ்வலின் தந்தையுமான எம்எல்ஏ ரேவண்ணாவின் வீட்டில் வேலை செய்த 48 வயதுபெண், ஹொளேநர்சிப்பூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். ரேவண்ணாவும், அவரது மகன் பிரஜ்வலுக்கும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார். அதன்பேரில், ரேவண்ணா, பிரஜ்வல் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை குழு தலைவர் பி.கே.சிங் தலைமையிலான அதிகாரிகள் ஹாசனில் நேற்று விசாரணை மேற்கொண்டனர். பிரஜ்வல், ஜெர்மனிக்கு தப்பியோடியது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் உடனடியாக நாடு திரும்புமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சூழலில், பெங்களூரு, மண்டியா, ஹாசன் ஆகிய இடங்களில் ரேவண்ணா, பிரஜ்வலுக்கு எதிராக காங்கிரஸாரும், மகளிர் அமைப்பினரும் நேற்று போராட்டம் நடத்தினர். மஜதவுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய‌ ரேவண்ணா, பிரஜ்வலை கட்சியில் இருந்து நீக்குமாறு தேவகவுடாவுக்கு மூத்த நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ள‌னர். பிரஜ்வல் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூட்டணி கட்சியான பாஜகவும் அழுத்தம்தந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மஜத மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி தலைமையில் கட்சி எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. அப்போது, பிரஜ்வலுக்கு எதிராக ஏராளமான‌ பெண்கள் புகார் கொடுத்துள்ளதால் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தினர்.

பின்னர் குமாரசாமி பேசும்போது, ‘‘இந்த விவகாரத்தில் தவறுசெய்தது யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரஜ்வல் மீது சர்ச்சைக்குரிய புகார் வந்துள்ளதால், கட்சியில் இருந்து அவரை நீக்கியுள்ளோம்'' என்றார்.

வீடியோ வெளியானது எப்படி? பிரஜ்வலின் முன்னாள் ஓட்டுநர் கார்த்திக் கூறியதாவது: பிரஜ்வல் பல்வேறு பெண்களுடன் இருக்கும் வீடியோ கடந்த 2019-ல் எனக்கு கிடைத்தது. அவரது நெருங்கிய நண்பர்தான் அதை எனக்கு அனுப்பினார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க உதவுமாறு பத்திரிகையாளர் நவீன் கவுடா கூறியதால், அந்த வீடியோவை கொடுத்தேன். ஆனால், அதை வெளியிட நீதிமன்றத்தில் பிரஜ்வல் தடை பெற்றார்.

பின்னர், பாஜகவின் தேவராஜ் கவுடா, என்னிடம் அந்த வீடியோக்களை வாங்கினார். ஆனால், இந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என்று பாஜகவினர் கூறிவிட்டனர்.

இதனால், காங்கிரஸார் என்னை அணுகி சம்பந்தப்பட்ட வீடியோக்களை கேட்டனர். எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லாததால் தர மறுத்துவிட்டேன்.

இப்போது வீடியோ எப்படி வெளியானது என தெரியவில்லை. ஆனால், பிரஜ்வலுக்கு உரிய தண்டனை கிடைத்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் குறித்து பிரியங்கா காந்தி விமர்சனம்: கர்நாடக மாநிலம் கலபுரகியில் காங்கிரஸ் வேட்பாளர் தொட்டமணி ராதாகிருஷ்ணாவை ஆதரித்து கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

பல்வேறு பெண்களுடன் 3,000 ஆபாச வீடியோக்களில் இடம்பெற்ற பிரஜ்வலை பாஜக மேலிட தலைவர்களே வேட்பாளராக நிறுத்தினர். பாஜக நிர்வாகிகளே ஆபாச வீடியோக்கள் குறித்து தெரிந்து, அக்கட்சி தலைவர்களிடம் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது.

ஆனாலும், பிரஜ்வலின் தோள் மீது கையை வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தார். 10 நாட்களுக்கு முன்பு வரைகூட அவரை புகழ்ந்து பேசினார். இப்போது அவர்தான் பிரஜ்வலை நாட்டைவிட்டு தப்பியோட வைத்திருக்கிறார். பிரதமருக்கு பெண்கள் மீது அக்கறை இல்லை. இப்போதுகூட பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுக்க மறுக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மோடியுடன் தேவகவுடா, குமாரசாமி, ரேவண்ணா, பிரஜ்வல் ஆகியோர் ஏற்கெனவே எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரியங்கா காந்தி, ‘இதுதான் மோடியின் உண்மையான குடும்பம்’ என்று பதிவிட்டுள்ளார்.

அமித் ஷா கேள்வி: இதற்கு பதில் அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘பாஜக எப்போதும் பெண்களின் பக்கம் நிற்கும். கர்நாடகாவில் உங்கள் காங்கிரஸ் ஆட்சிதானே நடக்கிறது. பிரஜ்வல் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேடையில் பேசுவதைவிட்டு செயலில் காட்டுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்