பல பிரதமர்களை வைத்து கொண்டு ஆட்சி நடத்த முடியாது: ‘இண்டியா’ கூட்டணி பற்றி அமித் ஷா விமர்சனம்  

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

பிஹார் மாநிலம் ஜன்ஜார்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு வேட்டையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக நிலையான ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தந்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிக் கூட்டணியான இண்டியா கூட்டணியில் அந்த நிலைமை இல்லை. அவர்கள் பதவி மோகத்துக்காக அலைகின்றனர்.

இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமராக இருப்பார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார். அதன் பின்னர் வாய்ப்பிருந்தால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமர் பதவியை வகிப்பார்.

இண்டியா கூட்டணி சொல்வதைப் போல ஒரு நாட்டை இப்படியெல்லாம் நடத்த முடியாது. 30 ஆண்டுகளாக நிலையற்ற ஆட்சி நடைபெற்றதால், நாடு அதற்கான விலையை கொடுத்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் வலிமையான தலைமை கிடைத்திருப்பதன் மூலம் கொள்கை, வளர்ச்சி திட்டம் ஆகியவற்றிலும் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது.

அயல்நாடுகளில் இந்தியாவின் அதிகாரம், வலிமையைப் பாராட்டுகின்றனர். இந்த முறையும் நாட்டு மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

2 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது, “எதிர்க்கட்சியினர் பிரதமர் பதவியை ஏலம் விடுவதில் மும்முரமாக உள்ளனர். இண்டியா கூட்டணி கட்சியினர் ஒரு வருடத்துக்கு ஒரு பிரதமர் என்ற பார்முலாவை உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர் என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே கருத்தை வலியுறுத்தி மத்திய அமைச்சர் அமித் ஷா, இண்டியா கூட்டணியைத் தாக்கிப் பேசியுள்ளார்.

சில விநாடிகள் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்: உயிர் தப்பினார் அமித் ஷா

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா, சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் பிஹார் மாநிலம் பேகுசராய் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு ஹெலிகாப்டரில் பயணம் செய்தார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா ஹெலிகாப்டரில் ஏறி அமர்ந்ததும் ஹெலிகாப்டரை, பைலட் இயக்கினார். அப்போது ஹெலிகாப்டர் சில அடி தூரம் மேலே கிளம்பி உயரத்துக்குச் செல்ல முடியாமல் அந்தரத்தில் கட்டுப்பாட்டை இழந்து சில விநாடிகள் தடுமாறியது. மேலும் பக்கவாட்டிலேயே ஹெலிகாப்டர் பறந்தது. இதையடுத்து சுதாரித்த ஹெலிகாப்டர் பைலட், சமயோசிதத்துடன் செயல்பட்டு ஹெலிகாப்டரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதையடுத்து அடுத்த சில விநாடிகளில் ஹெலிகாப்டர் சீராக வானில் பறந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்து ஹெலிகாப்டர் தடுமாறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஹெலிகாப்டர் சீராக இயங்கியதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித் ஷா உயிர் தப்பினார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் சில விநாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது காற்றின் வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்