பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் விவகாரத்தில், கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் தொடங்கி திரிணமூல் காங்கிரஸ் வரை பாஜகவை குறிவைத்துள்ளன. “பிரஜ்வல் ரேவண்ணாவால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். 3,000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள், மக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளன” என்று காங்கிரஸ் காட்டமாக தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். ரேவண்ணாவின் மகன். கடந்த 26-ம் தேதி நடந்த மக்களவை 2-ம் கட்ட தேர்தலில், இவர் ஹாசன் மக்களவை தொகுதியிலிருந்து தே.ஜ.கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ ஒன்று வெளியானது. அதில் உள்ள பெண், பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை தனக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொந்தரவு செய்ததாக அவர் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் ஹாசன் மாவட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்... - கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தொடங்கி திரிணமூல் காங்கிரஸ் வரை பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாஜகவை குறிவைத்துள்ளன. இது தொடர்பாக பேசியுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ், “பாஜக கூட்டணிக் கட்சியான ஜேடி(எஸ்) எம்.பி.யின் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் சர்ச்சை, கர்நாடகாவில் இப்போதுதான் வெளிவந்துள்ளது என்பதை தேசிய ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. உண்மையில் விவகாரம் உச்சத்தை தொட்டுள்ளது.
முன்னாள் பாஜக வேட்பாளரான தேவராஜ் கவுடா என்பவர் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் விவகாரத்தை ஏற்கெனவே அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றதாக கூறுகிறார். ஆனால், அவர்கள் இதில் கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். மேற்கு வங்கத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் பெண்களின் பாதுகாப்பை பெரிய பிரச்சினையாக மாற்றும் பாஜக தலைவர்கள் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
» “மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை கொண்டுவர விடமாட்டேன்” - மோடி @ கர்நாடகா
» “பொய்மையே வெல்லும் என்பதுதான் மோடியின் கொள்கை” - ஜெய்ராம் ரமேஷ் சாடல்
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரத்தில் பாஜகவும் ஒரு பகுதியாக உள்ளது. அவருக்கு தேர்தலில் மீண்டும் சீட் வழங்கி பாஜக மன்னித்துள்ளது. இதன்மூலம் பாலின நீதி, பெண்களுக்கு மரியாதை எனப் பேசும் பாஜகவின் பாசாங்குத்தனம் வெளிப்பட்டுவிட்டது. பாரதிய ஜனதா கட்சியே... அவமானாக உள்ளது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: இதற்கிடையே, பிரஜ்வல் ரேவண்ணாவை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெங்களூருவில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா தலைமையில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு அக்கட்சியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய அல்கா லம்பா, “நூற்றுக்கணக்கான பெண்களுக்கு எதிரான கொடூரமான பாலியல் வன்கொடுமை இது. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். அவரின் 3,000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் கன்னடிகர்கள் மற்றும் இந்தியர்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி கேள்வி: இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணா செய்த கொடூரமான குற்றங்களைப் பற்றி கேள்விப்பட்டாலே நெஞ்சம் பதறுகிறது. நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் அவர். இனியும் பிரதமர் மோடி அமைதியாக இருப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் ஏற்கெனவே ஜேடிஎஸ் கட்சியின் சம்ருதி மஞ்சுநாத் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தப் பிரச்சினையால் கட்சியின் கடைமட்ட தொண்டர் கூட அவமானப்படுகிறார். கட்சிப் பெயரை வெளியில் சொல்லவே கூசுகின்றனர். கட்சித் தலைவர் ஹெச்டி தேவேகவுடா இவ்விவகாரத்தில் நல்ல முடிவெடுப்பார் என நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கிறோம்” என்று பதிவிட்டிருந்தார்.
கடந்த ஆண்டே எச்சரித்த பாஜக தலைவர்: இதற்கிடையே, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரம் குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதியே கர்நாடக பாஜக தலைவர்களில் ஒருவரான தேவராஜ் கவுடா என்பவர், அக்கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியதை தற்போது காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், “பிரஜ்வல் ரேவண்ணா உட்பட தேவகவுடா குடும்பத்தின் பல தலைவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் லீலைகள் அடங்கிய 2,976 வீடியோக்கள் கொண்ட பென் டிரைவ் உள்ளது. இதில் சிக்கியுள்ள சில பெண்களில் அரசு அதிகாரிகளும் அடங்குவர்.
இந்த வீடியோக்களை கொண்டு அவர் பெண்களை தொடர்ந்து பாலியல் மிரட்டல் செய்து வந்துள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து, மக்களவைத் தேர்தலில் ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணாவை வேட்பாளராக முன்னிறுத்தினால் இந்த வீடியோக்கள் பிராமாஸ்திராமாக தேர்தலில் பயன்படுத்தப்படலாம்.
ஏனென்றால், இந்த வீடியோக்களின் இன்னொரு காப்பி காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்துள்ளது. எனவே, அவர்களுடன் இணைந்தால் நாமும் கறைபடிந்து விடுவோம். ஒரு பாலியல் குற்றவாளியின் குடும்பத்துடன் இணைந்த கட்சி என்ற பெயருடன் தேசிய அளவில் நமது கட்சியின் நற்பெயருக்கு பெரும் அடி கிடைக்கும்” என்று எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கையும் மீறியே மோடியும், அமித் ஷாவும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளனர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
விலகி நிற்கும் குமாரசாமி: பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் குறித்து கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரும், மஜத கட்சித் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி கூறும்போது, “இந்த வீடியோவை திடீரென இப்போது 3 நாட்களுக்கு முன்னர் தேர்தல் வேளையில் வெளியிடக் காரணம் என்ன? ஏன் முன்னரே இதை வெளியிடவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உண்மை வெளிவரட்டும். குற்றம் புரிந்தவர்கள் தண்டனையை ஏற்க வேண்டும். இந்த வீடியோ தேர்தல் முடிவுகளில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
ஹசன் தொகுதியில் எங்கள் வேட்பாளருக்கே வெற்றி என்று எங்களுக்கு முதற்கட்டத் தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் ஒரு தனிப்பட்ட நபரைப் பற்றிய சர்ச்சையை விவாதிக்கும்போது ஏன் ஒட்டுமொத்த குடும்பத்தைப் பற்றியும் காங்கிரஸார் பேசுகின்றனர் எனக்குத் தெரியவில்லை. ரேவண்ணா ஜெர்மனி சென்றுள்ளாரா என என்னிடம் கேட்கிறீர்கள். அவர் தினம் தினம் என்னிடம் கேட்டா எங்கேயும் செல்வார்? அவர் என்னுடன் வசிக்கவில்லை. தனியாக வசிக்கிறார். அவரை இங்கே திரும்பிக் கொண்டு வருவது பற்றி அரசாங்கம் முடிவெடுக்கட்டும்.
இது தனிநபர் பற்றிய விஷயம். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் நான் எப்படி கண்காணிக்க முடியும். இது முழுக்க முழுக்க ரேவண்ணா குடும்பப் பிரச்சினை. அவர்கள் நால்வரும் தனியாக வசிக்கின்றனர். அவர்களே இப்பிரச்சினைகளை சரி செய்திருக்கலாம். எனக்கு முன்னரே தெரிந்திருந்தால் நான் எதுவாக இருந்தாலும் தடுத்திருப்பேன்” என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago