வேட்புமனுவை வாபஸ் பெற்றார் இந்தூர் காங்கிரஸ் வேட்பாளர் - பாஜகவில் இணைய அழைப்பு

By செய்திப்பிரிவு

இந்தூர்: காங்கிரஸ் கட்சியின் இந்தூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் அக்‌ஷய் காண்டி பாம் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இவர் இந்தூர் தொகுதியில் தற்போதைய பாஜக எம்.பி. சங்கர் லால்வானிக்கு எதிராக களமிறக்கப்பட்டிருந்தார்.

இந்தூரில் வரும் மே 13-ஆம் தேதி மக்களவை 4-ஆம் கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இது மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணிக்கு பேரதிர்ச்சியாக வந்துள்ளது.

அக்‌ஷய் காண்டி பாம் தனது மனுவை வாபஸ் பெற்றவுடனேயே அவரை பாஜகவில் இணையுமாறு பாஜக மூத்த தலைவரும் இந்தூர் எம்எல்ஏ.வுமான கைலாஷ் விஜய்வர்கியா அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், அக்‌ஷய் காண்டியுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து, “நாங்கள் அக்‌ஷய் காண்டியை பாஜகவில் இணைய அழைக்கிறோம். பிரதமர் மோடி, தேசியத் தலைவர் ஜேபி நட்டா, முதல்வர் மோகன் யாதவ், மாநிலத் தலைவர் விடி சர்மா ஆகியோரின் தலைமையில் பாஜகவில் இணையலாம்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் சூரத் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரை முன்மொழிந்த மூன்று பேர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தாங்கள் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை என்று மாவட்ட தேர்தல்அதிகாரியிடம் தெரிவித்ததை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதே விதியை பயன்படுத்தி காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் சுரேஷ் பத்சலாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. இப்போது இந்தூர் வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE