பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதால், பிஜூஜனதா தளம் உட்பட பலகட்சிகளில் இருந்து தலைவர்கள், தொண்டர்கள் பாஜக.,வில் இணைகின்றனர் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் மே 13,20,25, மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடைபெறுகிறது.
கடந்த 2019-ம்ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் 12 தொகுதிகளில் வென்று முதல் இடத்தை பிடித்தது. பாஜக 8 இடங்களில் வென்று 2-வது இடத்தை பிடித்தது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டும் வென்றது. இம்முறை அதிக இடங்களில் வெற்றி பெற பாஜக தீவிர முயற்சி எடுத்துள்ளது.
ஒடிசாவின் சம்பல்பூர் மக்களவை தொகுதியில் மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் போட்டியிடுகிறார். இங்கு பிரசாரத்துக்கு சென்ற தர்மேந்திர பிரதான் முன்னிலையில் பிஜூ ஜனதா தள கட்சியில் இருந்த பல தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பாஜக.,வில் இணைந்தனர்.
இது குறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: பிரதமர் மோடி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதனால் பிஜு ஜனதா தளம் மற்றும் இதரகட்சிகளில் இருந்து தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வெளியேறி பாஜக.,வில் இணைந்து வருகின்றனர்.
பின்பக்க கதவு வழியாக பிஜு ஜனதா தள கட்சியில் சேர்ந்தமுன்னாள் அரசு அதிகாரி ஒருவர் நாடாளுமன்றத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார். மாநிலத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றாதவர்கள், ஊழலில் ஈடுபட்டவர்களால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்